கிராம சேவையாளர்களின் இடமாற்றம் மூன்று மாதங்களுக்கு பிற்போடப்பட்டது –ஜனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 81 கிராம சேவையாளர்களின் இடமாற்ற நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


இது தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் 81 கிராம சேவையாளர்களுக:கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் பலர் தூர இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் கைக்குழந்தைகள் கொண்டவர்களும் கர்ப்பிணி பெண்களும் அதில் அடங்குகின்றனர்.

இது தொடர்பில் குறித்த கிராம சேவையாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.கிராம சேவையாளர்கள் அந்ததந்த பகுதிகளில் கடமையாற்றும்போதே அவர்களின் சேவை அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் என்பதுடன் கிராம சேவையாளர்கள் 24 மணி நேரமும் கடமையாற்றவேண்டும் என்ற பணிப்புரைகளும் உள்ளது.
இந்த நிலையில் ஓரு கிராம சேவையாளர் நீண்ட தூரம் சென்று சேவையாற்றுவது என்பது மிகவும் சிரமம் என்பதை விட அங்குள்ள மக்களுக்கு அதனால் பாதிப்பாகும்.காலை சென்று வேலை மூடிந்து கிராம சேவையாளர் 4.00மணிக்கு வீட்டுக்கு சென்றுவிட்டால் அவசர தேவையெனில் அக்கிராம மக்கள் கிராம சேவையாரின் சேவையினை நீண்ட தூரம் சென்று பெறவேண்டிய நிலையேற்படும்.

அதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியதுடன் சிறந்த சேவையினை கிராம சேவையாளரும் வழங்கமுடியாத நிலையேற்படும் என்பதை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினேன்.

எதிர்வரும் 03ஆம் திகதி கட்டாயமாக இடமாற்ற இடத்திற்கு சென்று கடமையினை பொறுப்பேற்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதனால் குறித்த இடமாற்றத்தினை அவசர நிலை கருதி மீளாய்வு செய்யுமாறும் இடமாற்ற மீளாய்வு செய்தவர்களின் விண்ணப்பத்தினை ஆராய்ந்து மிக முக்கியமான கட்டாய இடமாற்றம் வழங்கவேண்டியவர்களது இடமாற்றம் தவிர்ந்த ஏனையவர்களின் இடமாற்றத்தினை ரத்துச்செய்ய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் 03ஆம் திகதிய இடமாற்றத்தினை ரத்துச்செய்து மூன்று மாதகால அவகாசம் வழங்கி பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.