கல்குடாவில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுலையில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலைதொடர்பிலான செய்தி சேரிக்கச்சென்ற ஊடகவியலாளர் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு கும்புறுமுலை பாசிக்குடா வீதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலை குறித்த செய்தி சேகரிக்க சென்றவர் மீதே சுமார் ஆறு பேர் கொண்ட கோஸ்டியினர் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் தப்பியோடிய செய்தியாளர்களை இரும்புக்கம்பி,பொல்லுகள் மற்றும் கத்துகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த நிலையில் குறித்த இருவரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சம் கோரியதாக தெரிவித்தனர்.

குறித்த மதுபானசாலை தொடர்பில் கிரான் மற்றும் வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையிலும் குறித்த மதுபான உற்பத்தி நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இரண்டு ஊடகவியலாளர்கள் இன்று காலை அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர்களான பு.சசிகரன், ந.நித்தியானந்த ஆகியோர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தம்மிடம் வாக்குமூலம் பெற்றுச்சென்றுள்ளதாக ஊடகவியலாளர் பு.சசிகரன் தெரிவித்தார்.

தம்மை கொலைசெய்யும் நோக்குடனேயே அவர்கள் துரத்திவந்ததாகவும் இரும்பு கம்பியினால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்ததுடன் தாம் ஓடியபோது மோட்டார் சைக்கிளில் தங்களை துரத்திவந்ததாகவும் தெரிவித்தார்.

தாங்கள் செய்தி சேகரிக்கு சென்றபோது எதுவும் அவர்கள் தங்களிடம் கேட்காமலேயே தங்களை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.