கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்கள் மீட்பு,இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதன் சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர்.

அண்மைக்காலமாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கூடாக சட்ட விரோதமான முறையில் மண் கடத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

அத்துடன் இது தொடர்பில் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான நடவடிக்கையெடுக்குமாறு அபிவிருத்திக்குழுவினால் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கொக்கட்டிச்சோலை பகுதி ஊடாக மண் கடத்துவது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றது.

அதனடிப்படையில் இன்று மண்முனைப்பாலம் ஊடாக வவுணதீவு பகுதிகளில் இருந்து சட்ட விரோதமான முறையில் மண் கொண்டுசென்ற இரண்டு கன்டர் வாகனங்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அது தொடர்பில் சாரதிகள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை இவர்கள் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.