கிழக்கு அரசியல்வாதிகள் அக்கரையற்ற நிலையில் உள்ளனர் –மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற வகையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

19வது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவருகின்றனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு மத்திய,மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வடமாகாணசபையில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நிரப்புவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் பிரதமரையும் வடக்கு அரசியல்வாதிகள் பட்டதாரிகள் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துகொடுத்துள்ளனர்.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது நிலைமைகள் தொடர்பில் கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் இதுவரையில் தமது பிரச்சினைகள் தொடர்பில் எதுவித அழுத்தங்களையும் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கவில்லையெனவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் தொடர்ச்சியான போராட்டங்களையும் வேறுவடிவான போராட்டங்களையும் முன்னெடுக்கப்போவதாகவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மாகாண அரசுகள் இணைந்து வேலையற்ற பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வினைக்காண்பதற்கு முன்வரவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.