கிழக்கில் 4700 பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை?

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 4700 பட்டதாரிகளை ஆசிரிய நியமனங்களுக்கு உள்வாங்குவதற்கான அனுமதியை பிரதமர் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நடைபெற்றதாகவும் அதன்போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக கிழக்கு முதல்வரை தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் முயற்சி கைகூடவில்லை.

கடந்த பத்து தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதனைத்தொடர்ந்த அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைமைகள் இது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் பேச்சுகளை நடாத்திவருகின்றனர்.

தமக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எழுத்துமூலம் அரசாங்கம் வழங்கும்போதே தமது போராட்டம் கைவிடப்படும் என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்துவரும் நிலையில் நாளை குறித்த போராட்டம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.