வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புதிதாக புனரமைக்கப்பட்ட வீதி –அதிகாரிகளின் அசமந்தம் என்கிறார் ஜனா

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டூர் மூங்கிலாறு வீதி வெள்ளத்தினால் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவற்றினை திருத்தி மக்கள் போக்குவரத்து செய்யக்கூடியவாறு அமைத்து வழங்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


திங்கட்கிழமை மாலை அப்பகுதிக்கு விஜயம் செய்த மாகாணசபை உறுப்பினர் வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த வீதியை பார்வையிட்டார்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியுதவி (யு.என்.டி.பி)திட்டத்தின் கீழ் 56 இலட்சம் ரூபா செலவில் இந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் முறையான வகையில் புனரமைக்கப்படாத காரணத்தினால் இந்த வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் தெரிவித்தார்.

மிக மோசமான நிலையில் இந்த வீதி சேதமடைந்துள்ளதன் காரணமாக இந்த வீதியூடாக கல்முனை மற்றும் மண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆனைகட்டியவெளி. பலாச்சோலை, சின்னவத்தை,காக்காச்சிவட்டை,உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆசிரியர்கள்,அரச அதிகாரிகள்,பொதுமக்கள் பயணிக்கமுடியாத நிலையிருப்பதனால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் க.சித்திரவேலிடம் தொடர்புகொண்டு குறித்த வீதியை உடனடியாக தற்காலிகமாவது புனரமைப்பு செய்து பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை ஆகியவற்றை இணைத்து குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உதவி ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் கருணாகரம் தெரிவித்தார்.

மக்களின் நன்மை கருதி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் வழங்கியுள்ள நிதியை ஒப்பந்தகாரர்கள் மூலம் குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் சரியான மேற்பார்வையில்லாத காரணத்தினால் மிகமோசமானமுறையில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.