இலங்கையில் இருந்து பிரதான ஏற்றுமதியாக மீன்பிடி துறையை மாற்ற நடவடிக்கை –மட்டக்களப்பில் அமைச்சர் மகிந்த அமரவீர

2020ஆம் ஆண்டு இலங்கை பிரதான மீன் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கக்ப்பட்டு முன்னெடுக்கப்படுவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர் சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி எஸ்.நிகஸன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்கள பணிப்பாளர் நாயகம்,பட்டிப்பளை பிரதேச செயலாளர் கௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெயப்பட்ட 400 மீனவர்களுக்கு வலைகளும் 44மீனவர்களுக்கு தோணிகளும் வழங்கப்பட்டன.
மீனவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் விசேட திட்டத்தின் கீழ் இந்த மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மீனவர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வருமானத்தைப்பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் இரால் குஞ்சுகளை விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு அமைச்சர் தெரிவித்தார்.