கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் கல்லூரி தினமும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துவமான பெண்கள் பாடசாலையாக விளங்கிவரும் விவேகானந்தா மகளிர் கல்லூரியானது பல்வேறு சாதனைகளைப்படைத்துள்ளது.

இதன்போது கல்லூரியின் ஸ்தாபகர் தினம் மற்றும் கல்லூரி தினத்தை முன்னிட்டு கல்லூரி அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரவு பிரேமானந்தஜி மகராஜ்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ,சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஸ்தாபகர் தினம் மற்றும் கல்லூரி தினத்தை முன்னிட்டும் இதுவரை காலம் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் என்று அழைக்கப்பட்டுவந்த பெயர் விவேகானந்தா மகளிர் கல்லூரி என பெயர்மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையும் அதிதிகளினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அண்மையில் வெளியான உயர்தர பெறுபேற்று அடிப்படையில் பாடசாலையில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலையின் வளர்ச்சிக்கு தோள்கொடுத்தவர்களும் இதன்போது பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.