சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் -தமிழ் கலைஞர்கள் கோரிக்கை

இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும் பல்துறை கலைஞருமான சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் கலைஞர்களின் நன்மை கருதி இலங்கை தமிழ் திரைப்படச்சங்கம் ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் செங்கலடியில் உள்ள வேல்ஸ் நடனக்கல்லூரியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும் பல்துறை கலைஞருமான சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கலைஞர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இலங்கை தமிழ் திரைப்படச்சங்கம் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஒருங்கிணைத்து இலங்கை தமிழ் திரைப்படச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது இலங்கையில் தமிழ் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவர்களின் கோரிக்கைகளை வெளிக்கொணர்வதும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும் பல்துறை கலைஞருமான சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்,

இலங்கையில் சிங்க திரைப்படத்துறை இருப்பதுபோன்று தமிழ் திறைப்படத்துறை எம்மிடம் இல்லை.அதற்கான முயற்சிகளையே நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். ஆனால் ஒளி,ஒலியிலான பல பாடல்கள் தமிழ் கலைஞர்களிடமிருந்து வெளிவந்துள்ளன.எங்களுக்கு இலத்திரனியல் ஊடகங்கள் உதவிகளை வழங்குகின்றபோதிலும் அது மிகவும் குறைந்தளவிலேயே வழங்குகின்றது.

வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் உள்நாட்டு படைப்புகளுக்கு நேரங்கள் அதிகரிக்கப்படவேண்டும்.காலையில் இருந்து மாலை வரையில் 250க்கும் மேற்பட்ட பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.இதில் எத்தனை பாடல்கள் இலங்கை கலைஞர்களின் பாடல்கள் ஒலிபரப்புசெய்யப்படுகின்றன?

நாங்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றோமா,இலங்கையில் வாழ்கின்றோமா எங்களுக்குரிய இலத்திரனியல் ஊடகங்கள் எங்களது கலைஞர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்காதுவிட்டால் எங்களுக்கு யார் உதவுவார்கள் என்பதை உரியவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இலங்கையில் இருந்து பொப் பாடல்கள் அன்று இருந்த வானொலி மூலமாகவே உலக மக்களிடம் சென்றடைந்தது.கடந்த காலத்தில் தொடர்பாடல்கள் மிகவும் குறைந்த காலப்பகுதியில் இலங்கை பொப்பிசை பாடல்கள் உச்சத்தில் இருந்தன.அதற்கு காரணமாக அமைந்தது அன்றைய வானொலிகளாகும்.