கிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்கு அனுமதி –சிரேஸ் விரிவுரையாளர் இராஜேந்திரம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு அதில் மூன்று புதிய பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மு.இராஜேந்திரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2014ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் பாராட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை களுதாவளை மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி மு.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.அரசரெத்தினம்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம்,ஓய்வுபெற்ற வடகிழக்கு மாகாண பிரதிக்கல்வி செயலாளர் ரி.பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 92 பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை தேசிய,மாகாண,மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த 423 மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் ஆசிரியர்கள்.அதிபர்,கல்வி திணைக்கள அதிகாரிகளும் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
இதேபோன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்புமிக்க சேவையினையாற்றிவரும் அதிபர்கள்,ஆசிரியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் பெரும் சாதனைகளைப்படைத்துவரும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் கல்வியலாளர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிரேஸ்ட விரிவுரையாளர் மு.இராஜேந்திரம்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் உள்ளன.அவற்றில் பட்டிருப்பு கல்வி வலயம் அண்மைக்காலமாக பல சாதனைகளை நிகழ்த்திவருவதை அனைவரும் அறிவார்கள்.
புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு வலயம் முன்னோக்கி சென்றுகொண்டிருப்பதுடன் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப்பெறும் மாணவர்களையும் உருவாக்கிவருகின்றது.அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் எங்களுடன் இருப்பதன் காரணமாகவே மாணவர்கள் சாதனைகளை படைக்கின்றனர்.

அதேபோன்று சாதாரணதர பரீட்சையில் கடந்த மூன்று வருடங்களில் பல சாதனைகளைப்படைப்பதற்கு வலயம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.உயர்தரத்திலும் சித்தியடையும் வீதம் அதிகரித்துக்காணப்படுகின்றது.

ஏனைய வலயங்களுடன் ஒப்பிடும்போது பட்டிருப்பு கல்வி வலயம் முன்னணியில் உள்ளது வரவேற்கத்தக்கது. அதற்காக உழைத்த பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். மாவட்டத்தில் மட்டுமல்ல மாகாணத்திலும் இந்த வலயம் முன்னிலையில் உள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.கலைத்துறையில் மாவட்டத்திற்கு அப்பால் மாகாணத்திலும் தனித்துவத்தைப்பெற்றுள்ளது.

அதேபோன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பட பாடநெறியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு வலயம் முன்னணியில் உள்ளமை மிகமுக்கியவிடயமாகும்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தகவல் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.அதில் மூன்று புதிய துறைகள் அமைக்கப்படவுள்ளது.தகவல் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்பம் உட்பட மூன்று துறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடகாலத்தை பார்க்கும்போது ஆரம்பகாலத்தில் கலைப்பட்டதாரிகளை உருவாக்கும் வலயமாகவே பட்டிருப்பு வலயம் காணப்பட்டது.80ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் பட்டதாரிகளை உருவாக்கமுடியாத நிலையே இருந்தது.

ஆனால் 90ஆம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியான மாற்றத்தினை காணமுடிந்தது.தற்போது விஞ்ஞான பட்டதாரிகளை வெளியீடுசெய்வதற்கான வளங்களைக்கொண்டதாக காணப்படுகின்றது.

பட்டிருப்பு வலயத்தில் உள்ள 56 பாடசாலைகளில் கணித,விஞ்ஞான ஆசிரியர்கள் இல்லாத நிலையுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கான உடனடித்தீர்வினை காணவேண்டியுள்ளது.தற்காலிகமாக தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உதவுவதற்கு தயாராகவுள்ளோம்.ஏற்கனவே துறை ரீதியாக மாணவர்களுக்கான உதவிகளை கிழக்கு பல்கலைக்கழகம் மேற்கொண்டுவருகின்றது.

அண்மைக்காலமாக வெட்டுப்புள்ளிகள் அதிகரித்துச்செல்லும் நிலையை காணமுடிகின்றது.இது மாணவர்களுக்கு கடுமையான போட்டிகள் சவால்கள் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.ஆனால் கலைத்துறையின் வெட்டுப்புள்ளி குறைவடைந்துள்ளது.அதற்கு காரணம்
மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்க்கும் அளவு அதிகரிக்கும்போது வெட்டுப்புள்ளி குறைவற்கான சாத்தியங்கள் உள்ளது.கிழக்கு பல்கலைக்கழகத்தினை பொறுத்தவரையில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.250 பேரே கலைத்துறைக்கு அனுமதிக்கப்படும் நிலையில் தற்போது அது 600ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கலைகலாசார பீடத்தில் 1753 மாணவர்கள் கற்றுவருகின்றனர்.