மட்டக்களப்பில் நீதியமைச்சர், பொதுபலசேனா தலைவர்

மட்டக்களப்பு மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் அங்கு பொதுபலசேனா மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இன்று காலை மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டதுடன் கலந்துரையாடல் ஆரம்பமானபோது சிங்கள ஊடகவியலாளர்களை தவிர அங்கிருந்த தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து விகாரைக்கு முன்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பட்டிப்பளை பிரதேச செயலாளர்,பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,அலிசாகிர் மௌலானா ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலை தொடர்ந்து அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.