முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் 6 பேர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(லியோன்)

முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த   கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

     
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு  நகர் பகுதியில் உள்ள வெள்ளப்பாலத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் அதில் பயணித்த சாரதி உட்பட கர்ப்பிணிப்பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

21.12.2016 இன்று புதன்கிழமை பிற்பகல் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செல்லும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே  இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானபோது அவ்வழியே பயணித்த விமானப்படை  வீரர் ஒருவர் துரித கதியில் செயற்பட்டு 6 பேரையும் மீட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்   .

6 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவரும் கர்ப்பிணிப்பெண்ணும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார்  விபத்து தொடர்பான தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.