பாரம்பரியங்களை தொலைத்துவிட்டு நிம்மதியற்றர்களாகவுள்ளோம் - மட்டு.கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார்

நாம் பல பாரம்பரியங்களை தொலைத்துவிட்டு நிம்மதியற்ற எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு தாழங்குடா கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ணமிசன் தலைவர் ஸ்ரீமத் பிரபுபிரபானந்த ஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தமிழ் மொழிப்பிரிவிற்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் த.யுவராஜன் மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனர்ப் ஹைதர் அலி ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக தாழங்குடா கல்வியல் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

மாணவர்களை வாசிப்பில் ஈடுபடுவத்துவதன் மூலம் அவர்களினை முழுமையடையச்செய்யும் வகையில் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறன் மற்றும் பேச்சாற்றலை அதிகரிக்கும் வகையில் இந்த வாசிப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இது தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

இதன்போது வாசிப்பு மாத்தினை குறிக்கும் வகையிலான கற்றல்செயற்பாடுகளைக்கொண்ட கண்காட்சி திறந்துவைக்கப்பட்டதுடன் நடைபெற்ற பல்வேறுபட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய உபபீடாதிபதி,

இன்றை சமூகத்தின் மத்தியில் பேச்சு மற்றும் வாசிப்பு தொடர்ப்பில் சலிப்புதன்மையை காணமுடிகின்றது.இன்றை நவீன யுகத்தில் பல்வேறுபட்ட நவீன சாதனங்களினால் வாழ்வதன் காரணமாகவே இந்த நிலைமையேற்பட்டுள்ளது.

வாசிப்பின் ஊடாக மனிதன் பூரணத்துவம் அடைகின்றான் என்று கூறப்படும்போது அந்த பூரணத்துவம் எவ்வாறு அடைகின்றது என்பதை நாங்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

நாங்கள் பல பாரம்பரிய விடயங்களை தொலைத்துவிட்டு இன்று நிம்மதியிழந்து,எதிர்காலத்தில் எமது வாழ்க்கை எவ்வாறு இருக்கப்போகின்றது என்று அறியாத வகையில் வாழ்ந்துகொண்டுள்ளோம்.

ஒரு கணிணி யுகம் முடிவடைந்து தற்போது கையடக்க தொலைபேசி யுகத்தில் வாழ்ந்துகொண்டுள்ளோம்.இன்று அடுத்தவருடன் பேசவேண்டிய தேவையும் இல்லை.கையடக்க தொலைபேசியை ஒரு வழிகாட்டியாக கொண்டு இயங்கும் காலமாக தற்போதைய காலம் இருந்துவருகின்றது.

ஒரு மனித் பூரணத்துவம் அடையவேண்டுமானால் அவன் உடல் ரீதியாக முழுமைபெறவேண்டும்,உளரீதியாக முழுமைபெறவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக சிந்தனையுடன் வாழவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தினால் எதிர்காலத்தில் நேரத்துடன் போட்டியிடவேண்டிய நிலைமையேற்படும்.