மண்முனைப்பற்றில் மதுபானசாலைகளை குறைக்குமாறு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கையினை குறைக்க நடவடிக்கையெடுக்குமாறு மண்முனைப்பற்று பிரதேச பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மண்முனைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,சிப்லிபாரூக் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி,உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரசாந்தன் பலர் கலந்துகொண்டனர்.

ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள மதுபானசாலையின் செயற்பாடுகளினால் அப்பகுதியில் பொது மக்கள் தினமும் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அவற்றினை அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கையெடுக்கNவுண்டும் எனவும் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் இதன்போது தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கிரான்குளம் தொடக்கம் ஆரையம்பதி வரையில் மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை ஹோட்டல்கள் ஏழு இயங்கிவருவதாக இங்கு பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

800 பேருக்கு ஒரு மதுபானசாலை என்ற ரீதியில் இயங்கிவருவதாகவும் இதன் காரணமாக மண்முனைப்பற்றில் பாரிய சமூக சீர்கேடுகள் இயங்கிவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக ஆரையம்பதி பிரதான வீதியில் இயங்கிவரும் மதுபானசாலையினால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதாகவும் இங்கு பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆரையம்பதியின் பிரதான வீதியில் இயங்கும் குறித்த மதுபானசாலைகள் உட்பட மண்முனைப்பற்றில் உள்ள மதுபானசாலைகளை மூன்றாக குறைக்கவேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மதுபானசாலைகள் வருடாந்தம் பிரதேச செயலகத்தில் புதுப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பிரதேச செயலாளர் பரிசீலிக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.