மண்முனை வடக்கில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள இளைஞர் யுவதிகளுக்கான பிரதேச இளைஞர் முகாமின் ஆரம்ப நிகழ்வில் மன்முனைவடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

(சசி துறையூர்) 

கல்லடி புனித தெரேசா மகளீர் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இளைஞர் பயிற்சி முகாம் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவிப் பிரதேச செயலாளர் திரு எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN நைறுஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகள் தோறும்  இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திருமதிவி. பிரசாந்தி அவர்களின் மேற்பார்வை மற்றும் ஒருங்கினைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இம் முகாமில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட  இளைஞர் கழகங்களைச் சேர்ந்த100 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.

மூன்று நாட்கள் வதிவிடமாக நடைபெறவுள்ள இந்த முகாமில்  இளைஞர்களின் ஆளுமை விருத்திக்கான, வினைத்திறனான முடிவு எடுத்தல், திட்டமிடல், மென் திறன் விருத்திக்கான பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி ஆலோசனை வழி காட்டல், யோகாசன பயிற்சி என்பன துறை சார்ந்த வளதாரிகளால்  வழங்கப்படவுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.