வெல்லாவெளி பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு மற்றும்  புத்தடிமேட்டு பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக எதிர்நோக்கிவந்த பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கான ஆரம்பக்கூட்டத்தின் போது இது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), ஞ.கிருஷ்ணபிள்ளை மற்றும் மா.நடராஜா ஆகியோருடன் வெல்லாவெளி பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம்,மற்றும் நவகிரி பிரிவுக்கான நீர்ப்பாசண பொறியிலாளர் எம்.மயூரன் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை பார்வையிட்டனர்.

வெல்லாவெளி விவசாயிகளின் கோரிக்கையான பழுகாமம், வெல்லாவெளி கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான காக்கைத்தீவு மற்றும் புத்தடிமேடு கண்டங்களுக்கான பாதையானது பல இடங்களில் வெள்ளத்தால் உடைக்கப்பட்ட சேதமடைந்துள்ளதால் இதனை புனரமைத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதில் காக்கைத்தீவு கண்டம் 300 ஏக்கர் விவசாய நிலமும், புத்தடிமேடு 250 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளதாகவும் இதற்கான பயணத்தினை அவர்கள் தோணி மூலம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இந்த தோணிப்பயணத்தின் போது முதலையின் அட்டகாசங்களுக்கு முகங்கொடுத்துள்ளாதாகவம் அதனால் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மழை வெள்ள காலத்தில் தாம் முழுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக தாங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கான மதீப்பீடு 25 மில்லியன் என பொறியிலாளரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக இதனை எதிர்வரும் வருடத்தில் வருகின்ற நிதி ஒதுக்கீடுகளில் புனரமைப்பு செய்வதாக விவசாய அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இங்கு உறுதியளித்தனர்.