கடற்கரை பாதுகாப்பு செயற்றிட்டத்தை முறையற்ற விதத்தில் பாவிக்க ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றார் –ஜனா குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கடற்கரை எல்லைகளை பாதுகாப்பதற்கான செயற்றிட்டத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா முறையற்றவிதத்தில் செயற்படுத்த முயற்சிப்பதாகவும் அதற்கு அரசாங்க அதிபர் துணைபோயுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற பெரும் வாதப்பிரதிவாதங்களில் கலந்துகொண்டு பேசியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,

மட்டக்களப்பில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கடற்கரை பிரதேசங்களை பாதுகாப்பதற்கான திட்டத்தின் ஊடாக நாவற்குடா மற்றும் ஆரையம்பதி வரையான கரையோரப் பகுதிகளுக்கான பாதுகாப்பு எல்லைகளை அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இடையில் உள்ள காத்தான்குடி பிரதேசத்திற்கான பணி மட்டும் இன்னும் நிறைவு செய்யப்படாதது ஏன்?

காத்தான்குடி பிரதேசத்தில் மட்டும் வாவிக்கரை எல்லையில் இருந்து 500 மீற்றருக்கு அப்பால் பாதுகாப்பு வேலிகளை அமைக்குமாறு அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன் அதற்கான தீர்மானங்கள் கடந்த 10.10.2016 அன்று காத்தான்குடியில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதியை அரசாங்க அதிபர் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது எனக் கூறி காத்தான்குடியில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்களை வாசித்துக் காட்டியுள்ளார்.

இதனை மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினறும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான ஸ்ரீநேசன் கூட்டறிக்கையில் அவ்வாறு இல்லை என்று வாதிட்டு கூட்டறிக்கையை வாசித்துக் காட்டியுள்ளார்.

இதனை மறுத்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஸ்ரீநேசன் தவறாக வாசிக்கின்றார்.

என்று கூறி அதனை தமிழ் ஆசிரியரான பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் வாசிக்குமாறு வழங்கினார்.

அதை அவர் வாசிக்கும் போது,

மட்டக்களப்பு மாவட்ட கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு எல்லை அமைக்கும் வேலைத்திட்டத்தின் படி காத்தான்குடி பிரதேசத்திற்கான வாவிக்கரை எல்லையில் இருந்து 500 மீற்றருக்கு அப்பால் பாதுகாப்பு வேலிகளை அமைக்குமாறு அமைச்சர் ஹிஸ்புல்லாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வாசித்துக் காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை மற்றும் பிரசன்னா இந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அரசாங்க அதிபருடன் கடுமையான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டதோடு இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து வெளியில் கருத்து தெரிவித்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் வெள்ளிமலை பின்வருமாறு கூறியுள்ளார்.

அண்மையில் அரசாங்க அதிபர் தான் எந்த இனத்திற்காகவோ அல்லது அரசியல் வாதிக்காகவோ பணியாற்றவில்லை நான் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கரையோரப் பாதுகாப்பு எல்லை அமைக்கும் வேலைத்திட்டத்தில், அரசாங்கம் காத்தான்குடி பிரதேசத்திற்கு மட்டும் வேறு சுற்றுநிருபத்தை அனுப்பியுள்ளதா? என கேட்க வேண்டியுள்ளது.

ஹிஸ்புல்லாவின் இத்திட்டத்திற்கு அரசாங்க அதிபர் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்? மாவட்ட கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கரையோர எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மாறாக செயற்படுமாறு அவர்களுக்கு எவ்வாறு அரசாங்க அதிபர் அழுத்தம் கொடுக்க முடியம்?

எனவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டக்களப்பில் உள்ள கல்லாறு போன்ற பல கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆகவே உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.