பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டு.மாவட்ட செயலக அணி முதலிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் 17ஆம் திகதிகளில் போட்டிகள்  நடைபெற்றுவந்தன.

ஒன்பது பிரதேச செயலகங்களின் அணிகள் இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதுடன் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியும் மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியும் தெரிவாகியிருந்தது.

நேற்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் இறுதிப்போட்டி ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மண்முனைபற்று பிரதேச செயலக அணி பத்து ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 77ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி 8.3ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப்பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இந்த இந்த சுற்றுப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியை சேர்ந்த செ.டிலக்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரராக பட்டிப்பளை பிரதேச செயலக அணியை சேர்ந்த கே.வினோகாந்தனும் தெரிவுவெய்யப்பட்டதுடன் தொடராட்ட நாயகனாக மண்முனைப்பற்று பிரதேச செயலக அணி தலைவர் கே.சுரேந்திரனும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியை சேர்ந்த அ.கிருஷாந்தலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டன.

இதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாம் இடத்தினை மண்முனைப்பற்று அணியும் மூன்றாம் இடத்தினை வாழைச்சேனை பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.

இறுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமத லக்ஷனியா பிரசாந்தன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.