கிழக்கு மாகாணா இலக்கிய விழா மட்டக்களப்பில் -இறுதிநாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்பு

கிழக்கு மாகாண இலக்கிய விழா எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் மூன்று தினங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண இலக்கிய விழா தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது நடைபெறவுள்ள இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00மணிக்கு கல்லடி உப்போடையில் உள்ள விபுலானந்தரின் சமாதியருகில் இருந்து பண்பாட்டு ஊர்வலம் நடைபெறவுள்ளது.

நான்கு அம்சங்களைக்கொண்டதாக இந்த இலக்கியவிழா நடைபெறவுள்ளதாகவும் இதன்போது நடைபெறும் பண்பாட்டு பேரணியானது மாணவர்கள்,கலைஞர்கள் தமிழின் பாரம்பரியத்தைக்க வெளிப்படுத்தும் வகையில் கலந்துகொள்வார்கள் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்,

மூன்று நாள் இலக்கிய விழாவில் இரண்டு நாட்கள் இலக்கிய ஆய்வரங்கு நடைபெறவுள்ளதுடன் இந்த ஆய்வரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கலை இலக்கியத்துடன் தொடர்புடைய பேராளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.

இரண்டு தினங்களும் காலை நிகழ்வாக ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளதுடன் பிற்பகல் நான்கு மணி தொடக்கம் ஏழு மணி வரையில் கலை,கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இதன் முதல்நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன் இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் மூன்றாம் நாள் நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த மாகாண இலக்கிய விழாவில் கலைத்துறைக்கு பெரும்பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆர்வலர்கள்,மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு கோட்டுக்கொள்கின்றேன் என்றார்.