மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர்கள் கலந்துகொள்ளாத நிலையில் கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு மீளாய்வுசெய்யப்பட்டுள்ளதுடன் நடைபெற்றுவரும் வேலைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக மண் மற்றும் கிறவல் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப்பணிகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது மண் ஏற்றுவது குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தெரிவிக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு விலையில் மண் விற்பனைசெய்யப்படுவதாகவும் குறைந்த விலையில் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டன.

உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மண்,கிறவல்பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த சுரங்க,கனியவளத்துறையின் மாவட்ட பணிப்பாளர் மயூரன் தான் தற்போதுதான் கடமையேற்றுவந்துள்ளதாகவும் திணைக்களத்தில் ஓழுங்கமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான மண்,கிறவல்களை வழங்க விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக மழை காலம் ஆரம்பமாகியுள்ளதால் அபிவிருத்திப்பணிகளை துரிதப்படுத்தவேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.