கடந்த காலத்தில் திட்டமிடாத அபிவிருத்தியினால் மட்டு.மாநகரசபை பல்வேறு இடர்பாடுகள் -மட்டு.மாநகர ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்படாத அபிவிருத்திகள் காரணமாக பல இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் உள்ளுராட்சி மாதம் நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களை வரிசெலுத்த துண்டும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கும் பணிகளும் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையில் சேவைகளைப்பெற்றுக்கொள்வதில் கடந்த காலத்தில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் தமக்கான தேவைகளை இலகுவான முறையில் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகள் மாநகர ஆணையாளர் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றார்.
அதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடயங்களையும் பதிவுசெய்து அட்டவனைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகரசபை அதிகாரிகள்,ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றி மாநகர ஆணையாளர்,
உள்ளுராட்சி வாரமாக கடந்த காலத்தில் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறை உள்ளுராட்சி மாதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கடந்த முறை உள்ளுராட்சி வாரம் அனுஸ்டிக்கப்பட்டபோது சுகாதாரம்,வருமானம் ஈட்டுதல்,பொதுமக்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்குவதது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இம்முறை இந்த நிகழ்வு வித்தியாசமான முறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தொடர்ந்தேச்சியான சேவையூடாக உற்பத்தி திறன்மிக்க அபிவிருத்தி என்ற தலைப்பில் இந்த உள்ளுராட்சி மாத நிகழ்வினை ஏற்பாடுசெய்துள்ளோம்.

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும்போது அடிப்படையில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.சரியான தகவல்கள் மாநகரசபையில் இல்லாத நிலையே இருக்கின்றது.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் 42ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகள் உள்ளன.ஆனால் 32ஆயிரம் சொத்துகள் தொடர்பான பதிவுகளே காணப்படுகின்றது.

தகவல்கள் சரியாக இல்லாவிட்டால் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்குவதில் திருப்தி ஏற்படாத நிலையே இருக்கும்.பொதுமக்கள் மாநகரசபைக்கு வந்து அலக்கழிக்கப்படுதாக சொல்லப்படுவதன் முக்கிய காரணம் மாநகரசபை மற்றும் உள்ளுராட்சி சபை தொடர்பான போதுமான விளக்கத்தை கொண்டிராத நிலையே காரணமாகும்.

மட்டக்களப்பு மாநகரசபைப்பகுதியில் கடந்த 30 வருடகாலத்தில் சட்டங்கள் சரியாக அமுல்படுத்தப்படவில்லை.கடந்த காலத்தில் மாநகர கட்டளைச்சட்டங்களை மதித்து செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.மட்டக்கள்பு மாநகரசபை பிரதேசத்திற்குள் பல கட்டிடங்கள் அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டுள்ளன.அதேபோன்று வீதிகள் முறையற்ற வகையில் நிரப்பப்பட்டுள்ளன.

ஆட்சி உறுதி என்று கூறப்படும் காணி உறுதியானது சட்ட ரீதியற்ற ஒரு ஆவனமாகும்.சில சட்டத்தரணிகள் அதனை ஊக்குவித்து பதிவுசெய்துள்ளனர்.அது தொடர்பான அறிவுபொதுமக்களிடம் கிடையாது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திட்டமிடப்படாத அபிவிருத்தி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வெள்ளப்பெருக்கு அதேபோன்று டெங்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் பொதுமக்கள் அறியமுடியாத நிலையிலேயே உள்ளனர்.அதனை அறிந்து அவர்களுக்கு எவ்வாறு சிறந்த சேவையினை வழங்கலாம் என்பதை ஆராய்வதும் இந்த நகர்வலத்தின் முக்கியமான நோக்கமாகும்.

விரும்பியோ விரும்பாமலோ சில ஏற்பாடுகளை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.சில காணிகளுக்கு சரியான உரிமைப்பத்திரம் கிடையாது.சிலர் சர்ச்சைக்குரிய காணிகளில் பெரியளவிலான வீடுகளையும் கட்டியுள்ளனர்.சரியான உரிமம் இல்லாத காணிகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி மன்றத்திற்கு உரிமை இருக்கின்றது.ஆனால் மாநகரசபை அதனை மனிதாபிமான ரீதியிலேயே நோக்குகின்றது.சட்ட ரீதியாக பார்க்கவில்லை.

சில இடங்களில் காணிகள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.அவர்களுக்கு சரியான காணி உறுதிப்பத்திரம் இல்லாத நிலையிருக்கின்றது.சில இடங்கள் சர்ச்சைக்குரிய பகுதியாகவும் உள்ளது.ஒரு திட்டத்தினை மேற்கொள்ளமுடியாத நிலையிருக்கின்றது.

எனவே இதனை சட்டரீதியற்றது என்று நோக்கமுடியாது.அவ்வாறு நோக்கினால் அப்பகுதியில் வீதிகளை அமைக்கமுடியாது.வீதி விளக்குகளை பொருத்தமுடியாது. குப்பையினை அள்ளமுடியாது, நீர்விநியோகம் செய்யமுடியாது.இவைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டிய பொறுப்பு மாநகரசபைக்கு உள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இலங்கையில் மிகப்பெரும் பழமையான மாநகரசபையாகும்.ஆனால் இந்த மாநகரசபையில் பல தரவுகளை பெறமுடியாத நிலையே இருக்கின்றது.

கொழும்பு உட்பட பல மாநகரசபைகளில் சட்ட விரோதமானமுறையிலும் அனுமதிபெறாத நிலையிலும் கட்டப்படும் கட்டிடங்கள் அகற்றப்படுகின்றன.அதற்கு மாநகரசபை சட்டத்தில் இடமுள்ளது.எனினும் இதனை மட்டக்களப்பு மாநகரசபை ஒருபோதும் செயற்படுத்தமாட்டாது.

சட்டங்கள்,உபவிதிகள் பொதுமக்களை துன்பத்திற்குட்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை.பொதுமக்களுக்கான சேவையினை ஒழுங்குபடுத்துவதற்கும் இலகுபடுத்துவதற்குமாகும்.
நாங்கள் எங்களிடம் வரும் பொதுமக்களிடம் சட்டங்கள்,உபவிதிகளைக்காட்டி அவர்களுக்கான சேவையினை தடைசெய்வது நோக்கமல்ல.அதன் மூலம் எவ்வாறான உதவிகளை செய்யமுடியும் என்றே சிந்திக்கவேண்டும்.