துறைநீலாவனை கிராமத்தில் முளைவிடும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் போவது ஏன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான துறைநீலாவனைக் கிராமத்திற்கு அரசியல் வாதிகளினுடைய, அரச அதிகாரிகளினுடைய பார்வையும், அபிவிருத்தி திட்டங்களும் கிட்டுவது என்பது அபூர்வம்.

அத்தி பூத்தது போல் கிடைக்கும் அபிவிருத்தி திட்டங்களும் முற்றுப் பெறாமால் இடைநடுவில் முடங்கிப் போகின்றன.

நீண்ட காலமாக பாரியளவில் மேசமடைந்து காணப்பட்ட மேற்கு வீதி பல வருட காத்திருப்புக்களுக்கும் முயற்சிகளுக்கும் மத்தியில் கெங்கிறிட் இடப்பட்டு புனரமைப்பதற்கான வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. சில தினங்களாக ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.  திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனமைக்கான காரணம் அறிய முடியாது உள்ளது.

தற்போது பருவ மழைக் காலம் தொடங்கி விட்டது. மேலும் மழைக்காலம் அதிகரிக்கும் முன்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த பாதை புனரமைப்பினை விரைவு படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு துறைநீலாவனை பொது மையானத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட  அஞ்சலி பீடத்திற்கான வேலைகள் மற்றும் துறைநீலாவனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிதிகள் மேடை என்பவற்றுக்கான வேலைகள் முற்றுப் பெறாமல் முடங்கிக் காணப்படுகின்றன.
சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.