பாடசாலை மட்டத்தில் விசேட போதையொழிப்பு திட்டம் -கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் வகையில் விசேட செயற்றிட்டங்களை பாடசாலை ரீதியாக ஆரம்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

முட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் நிலமைகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்புகள் இன்று சனிக்கிழமை நடைபெற்றன.

காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் இன்று நடைபெற்றதுடன் இதன்போது பாடசாலைகளில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் முதல் கட்டமாக காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் காத்தான்குடி அல்-ஹிறா மகாவித்தியாலத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் உள்ள 30க்கும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒவ்வொரு பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்துவைக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையிலான கலந்துரையாடலாக இது அமைந்தது.

போதைப்பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முன்னணியில் உள்ளதாகவும் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
போலிஸ்மா அதிபர் தந்த அறிக்கையின் படி மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகமாகவுள்ளது.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்Nசுனை ஆகிய முஸ்லிம் பகுதிகளிலும் ஆக கூடிய போதைப்பாவனை உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறிப்பாக போதைப்பாவனையினை ஒழிக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் விசேட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் முதலமைச்சர் இங்கு தெரிவித்தார்.