கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகைதந்தவண்ணமுள்ளனர்.

இந்த நிலையில் வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகைதரும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சுற்றுலா பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் விகையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தில் இந்த சுற்றுலா விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு இன்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராட்சி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த விசேட சுற்றுலா பொலிஸ் குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் இந்த பொலிஸ் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.