தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் மக்களை அழிக்கவந்த கட்சி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் மக்களை வாழவைக்க வந்த கட்சி அல்ல.அது தமிழர்களை அழிக்க வந்த கட்சியென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் 90ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட 17பேரின் நினைவுதினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உண்மையில் இந்த புதுக்குடியிருப்பு கொலை சரியான வகையில் திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கவேண்டும் என்று எம்மைப்போன்று ஒரு சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு இனம் எம்முடன் சேர்ந்த ஒரு இனம் பெரும்பான்மை இனத்தின் ஆயுதப்படைகளுடன் சேர்ந்து நடாத்திய நாடகத்தில் பலியாக்கப்பட்டவர்கள் தான் இந்த புதுக்குடியிருப்பில் படுகொலைசெய்யப்பட்டவர்களாகும்.

இவர்கள் தங்களது உயிர்களை தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழ் மண் விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.அவர்களை வருடாந்தம் நினைவுகூருவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

புதுக்குடியிருப்பு பகுதியில் திட்டமிட்ட வகையில் இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இந்த படுகொலையில் இருந்து தப்பியவர்கள் அது தொடர்பில் சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர்.
இந்த நாட்டில் உள்ள நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டில் இடம்பெற்ற கொள்ளை,கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்திவரும் நிலையில் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இரண்டு படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைசெய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் மக்களின் விடிவுக்காக ஆரம்பிக்கப்படவில்லை.தமிழ் மக்களை அழிப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும்.அந்த கட்சியினை சேர்ந்தவர்களினாலும் இங்கு கொலைகள் நடாத்தப்பட்டுள்ளன.அதன் தலைவர்கள் இன்றும் உள்ளனர்.அது தொடர்பில் இப்பகுதி மக்கள் நேரடியாக சுட்டிக்காட்டுகின்றனர்.இது தொடர்பில் இந்த அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.

படுகொலைகள் செய்யப்பட்டு அந்த கொலைகள் மறைக்கப்பட்டு இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த கால அரசாங்க தலைவர்கள் நடாத்திய நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் எமது உறவுகளை கொன்றொழித்த கயவர்களை சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் காட்டவேண்டிய அவசியம் இந்த அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த படுகொலைகளை மேற்கொண்டவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.இந்த உயிர்கள் இழக்கப்பட்டதன் காரணமாக பல குடும்பங்கள் இன்றும் நிர்க்கதியான நிலையிலேயே இருந்துவருகின்றது.

ஒரு இனத்திற்கு அருகில் உள்ள தமிழ் பகுதிகளே அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் பகுதிகளை அழித்து காணிகளை சூறையாடி திட்டமிட்ட குடியேற்றங்களை செய்யும் நோக்கிலேயே இந்த படுகொலைகள் நடாத்தப்பட்டன.இவ்வாறான கொலைகளை நடாத்தியவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுவதை அனுமதிக்கமுடியாது.

எமது தலைவர்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.எமக்கான சிறந்த தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.அவர்களின் கரங்களை பலப்படுத்தவேண்டியது எமது பொறுப்பாகும்.

தமிழ் பிரதேசங்களில் தமிழர்களின் பண்பாட்டு அடிச்சுவடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. மண்முனைப்பற்றை ஆண்ட அரசியின் புதைபொருட்கள் ஆரையம்பதியின் சில பகுதிகளில் உள்ளது.அவைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அறிகின்றோம்.