தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான மட்டக்களப்பினை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா காலமானார்

தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் மட்டக்களப்பினை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருச்சியில் நீண்டகாலமாக குடும்பத்துடன் வசித்துவந்த கே.ஜி.மகாதேவா, சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஜூலை முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு மாதகாலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ பத்திரிகையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா, போர் நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் ஈழநாடு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஈழநாடு பத்திரிகை எரிக்கப்பட்ட போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சிங்களாவாடியில் பிறந்த மகாதேவா கண்டியில் திருமணம் செய்திருந்த நிலையில் தன்னுடைய 30 வருட பத்திரிகைத்துறை வாழ்க்கையில் எட்டு வருடங்கள் ‘செய்தி’ பத்திரிகையிலும், 22 வருடங்களை ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் பணியாற்றிய கே.ஜி.மகாதேவா எழுதும் கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
ஈழநாட்டில் அவர் எழுதிவந்த ‘இப்படியும் நடக்கிறது’ என்ற பகுதி பெரும் வரவேற்பைப்பெற்றது.

நாட்டு நிலை காரணமாக திருச்சிக்கு இடம்பெயர்ந்த அவர் அங்கிருந்துகொண்டே எழுத்துத்துறையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நினைவலைகள், கதையல்ல நிஜம், தர்மத்தின் குரல்கள், நிஜங்களின் பதிவுகள் என நான்கு நூல்களை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

அவர் எடுத்த நோர்காணல்களின் தொகுப்பாகவே தர்மத்தின் குரல் வெளிவந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.அவரின் இறுதிக்கிரியைகள் திருச்சியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இலங்கையில் இன்று தேசிய தமிழ் பத்திரிகைகளில் பிரதான நிலையில் உள்ள பத்திரிகை ஆசிரியர்களை வளப்படுத்தி உருவாக்கிய பெருமையினையும் மகாதேவா கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலரையும் உருவாக்கிய பெருமையினைக்கொண்டவராகவும் திகழ்ந்த அவர் பல வருடங்கள் மட்டக்களப்பு வரமுடியாத சூழ்நிலை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.