மட்டக்களப்பின் சாதனை மன்னர்களுக்கு மகத்தான வரவேற்பு...........

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப்போட்டியில் மல்யுத்த போட்டி நிகழ்;ச்சியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப்பெற்று மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையினை சேர்ந்த மாணவர்கள் ஒரு தங்கம் இரண்டு வெள்ளிப்பதக்கங்களைப்பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்ந்த்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்த குறித்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்,பாடசாலை அதிபர்,மாணவர்கள் இணைந்து இந்த வரவேற்பு நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து பாண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டதுடன் வாகன பவணியாக கல்லடி மணிக்கூண்டு கோபுரம் வரை அழைத்துச்செல்லப்பட்டதுடன் அங்கிருந்து பாடசாலை வரை மாணவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லடி மணிக்கூண்டு கோபுரம் இருந்து சிவானந்தா தேசிய பாடசாலை வரையில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் அணிவகுத்திருந்த மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பளித்தனர்.

மல்யுத்த போட்டியில் சிவானந்த தேசிய பாடசாலை மாணவனான எஸ்.ரூபிகரன் 43 மற்றும் 47 கிலோ எடைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்த நிலையில் இந்த ஆண்டு தங்கப்பதக்கத்தினைப்பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதேபோன்று ரி.பார்த்திபன்(50,55கிலோ எடை),என்.பிரகாஸ்(70கிலோ எடை) ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளதன் காரணமாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை சிவானந்தா தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் வி.மனோராஜின் வழிகாட்டலில் பாடசாலையின் விளையாட்டுத்துறை பொறுப்பு ஆசிரியர் ரி.குகாதரன் மற்றும் மல்யுத்த பயிற்சி ஆசிரியர் வி.திருச்செல்வம் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மாகாண ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 38 பாடசாலைகள் கலந்துகொண்ட இந்த மல்யுத்தப்போட்டியில் 11 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு சிவானந்தா இரண்டாம் இடத்தினைப்பெற்றுக்பெற்றுக்கொண்டதாக சிவானந்தா தேசிய பாடசாலையின் மல்யுத்த பயிற்சி ஆசிரியர் வி.திருச்செல்வம் தெரிவித்தார்.

மல்யுத்த போட்டியில் முதல் இடத்தினை மொரட்டுவை பிரின்ஸ்ஒப் வின்ஸ் பாடசாலை 13.5 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.