சுற்றுலா மையமாக கல்லடி கடற்கரையை அபிவிருத்திசெய்ய 48மில்லியன் ஒதுக்கீடு –மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியினை சுற்றுலா இடமாக அபிவிருத்திசெய்வதற்கு சுமார் 49 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
அதற்கான அங்கீகாரத்தினை சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெண்களினால் நடாத்தப்படும் கடலுணவு நிலையத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக ரீதியான பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்ட சுற்றுலா துறை அபிவிருத்தி திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையும் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களின் வீதமும் அதிகமான நிலையில் இருக்கையில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அவ்வாறான நிலையினை குறைக்க உதவும் என்றார்.