2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு சம்பியன்

2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டம் 709 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண விசேட தேவையுடையவர்களுக்கான விளையாட்டு விழா சனிக்கிழமை ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவுபெற்றது.

புலம்பெயர் அமைப்புகளின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து பெருமளவான மாற்றுத்திறனாளிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற்றது.மைதான சுவட்டு நிகழ்வுகளும் மெய்வல்லுனர் போட்டிகளும் நடாத்தப்பட்டது.

இந்த போட்டியில் இரண்டாம் இடத்தினை திருகோணமலை மாவட்டமும் மூன்றாம் இடத்தினை அம்பாறை மாவட்டமும் பெற்றுக்கொண்டது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி, சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.