கிழக்கு மாகாணத்தில் 28000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் –கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் 28ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும் அவர்களுக்கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மாற்றுத் திறனாளிகளுடைய ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் இன்று மட்டக்களப்பு மைதானத்தில் நடைபெற்றதை கிழக்கு மாகாணத்தினுடைய எழுச்சியாகவே நான் காணுகின்றேன். ஏனைய மாகாணங்களைவிட கிழக்கு மாகாணத்திற்கு மாற்றுத் திறனாளிகள் இந்தப்பெருமையை சேர்த்திருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரிய நிதியை ஒதுக்கவேண்டிய தேவை சமூக சேவைகள் அமைச்சிற்கு இருக்கின்றது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சமூக சேவைகள் திணைக்களத்திற்கு பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 28ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களின் ஆளுமை இந்த மைதானத்தில் இன்று வெளிப்பட்டது மாற்றுத் திறனாளிகளை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக பாரியளவிலான நிதியை ஓதக்கீடு செய்ய வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மாற்றுத்திறனாளிகள் வடக்கு கிழக்கிலே அதிகளவில் இருக்கின்றார்கள். அதில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2979பேர் இருக்கின்றார்கள்.திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த காலத்தில் யுத்ததினால் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர்.

எதிர்வரும் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட திட்டங்களை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.அவற்றினை செய்யவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்படவேண்டும்.