தமிழ் மக்கள் நிர்க்கதியான நிலையில் நிற்கும்போது ஒற்றுமையீனமே காணப்படுகின்றது –ஜனா

தமிழ் மக்கள் பல இழப்புகளை சந்தித்தும் நிர்க்கதியாக நிற்கும் நிலையிலும் தொடர்ந்து ஒற்றுமையீனமே காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் 44வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாகவும் நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்க தொடர்ந்து உரையாற்றிய அவர்,

குழுப்போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலம் எங்களுக்குள் தலைமைத்துவங்கள் வளர்க்கப்படுகின்றன.எமது சமூதாயம் கடந்த காலத்தில் பட்டதுன்பங்களில் இருந்து மேல் எழவேண்டுமாகவிருந்தால் நாங்கள் ஒன்றுபட்டுசெயற்படவேண்டும்.

தமிழ் சமூகம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக உரிமைகளைப்பெறுவதற்கு வடகிழக்கில் ஆயுத ரீதியாக போராடிவந்தோம்.அதற்கு முன்னர் 1956தொடக்கம் ஆயுதப்போராட்டம் விரியும் அடைந்த 1983ஆம் ஆண்டு வரையில் அகிம்சை ரீதியாக நாங்கள் போராடிவந்தோம்.

பல போராட்டங்களை நடாத்தியுள்ளபோதிலும் இன்றுவரை எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை.நாங்கள் எதற்காக போராடினோமோ அந்த இலக்கு இன்றுவரையில் அடையப்படவில்லை.இன்று நாங்கள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் இராஜதந்திர ரீதியாக சர்வதேசத்தினை எங்கள் பக்கம் ஈர்த்தவண்ணம் உள்ளோம்.

தமிழ் மக்கள் பல இழப்புகளை சந்தித்தும் நிர்க்கதியாக நிற்கும் நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமையீனமே காணப்படுகின்றது.யார் குத்தினாலும் அரிசியாகவேண்டும் என்ற எண்ணப்பாடு எங்கள் மத்தியில் இல்லை.ஒரு அரசியல்வாதி ஒரு நல்ல விடயத்தினைசெய்யும்போது அதற்கு முட்டுக்கட்டைபோடுவதற்கு பலர் உள்ளனர்.

கடந்த காலத்தில் படுவான்கரை பிரதேசம் அபிவிருத்தி அடையாத பிரதேசமாக வெளியுலகுக்கும் இந்த நாட்டுக்கும் காட்டப்பட்டுவந்தது.ஆனால் இன்று துரிதகதியில் இப்பிரதேசம் அபிவிருத்தியடைந்துவருகின்றது.கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் அபிவிருத்தி அடைந்துவருகி;னறது.
நான் அரசியலில் இருப்ப தொழிலுக்கு அல்ல.நான் அரசியலில் இருந்துசெலவிடும் பணம் அரசியலுக்கான முதலீடு அல்ல.அரசியலை ஒரு சேவையாகவே நான் செய்துவருகி;ன்றேன்.

1982ஆம் ஆண்டு அனைத்தையும் துறந்து எமது மக்களின் விடுதலைப்போராட்டத்திற்காக களம் இறங்கிய நான் 1986ஆம் ஆண்டு விடே அதிரடிப்படையினருடன் நடைபெற்ற நேரடி மோதில் மூன்று குண்டுகள் என்னை தாக்கின.அன்று நான் உயிரிழந்திருந்தால் என்தாய் கூட என்னை இன்று மறந்திருக்கும் நிலையேற்பட்டிருக்கும்.அவ்வாறு தப்பிப்பிழைத்து இன்று மக்களுக்கான என்னால் முடிந்த சேவையினையாற்றிவருகின்றேன்.

தமிழ் மக்களின்; நலனை தீர்மானிக்கும் சக்தியாக விடுதலைப்புலிகள் இருந்தனர். 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் என்னைப்போன்றவர்களின் அனுபவம் தமிழ் மக்களுக்கு தேவைப்பட்டது.இலண்டனினல் நான் பிரஜா உரிமை பெற்றிருந்த நிலையிலும் நான் மக்களுக்காக சேவையாற்றவே குடும்பத்தினையும் அழைத்துக்கொண்டு இங்குவந்தேன்.

2001க்கு முன்னர் இயக்கங்களுக்குள் ஒற்றுமையில்லாத நிலையே இருந்தது.ஆனால் 2001க்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த ஒற்றுமையீனத்தை உணர்ந்து கடந்த கால கசப்பான சம்பங்களை மறந்து ஒரு குடையின் கீழ் அனைவரும் ஓரணியாக போராடினால்தான் தமிழ் மக்களின் உரிமையினைப்பெறமுடியும் என்ற நோக்குடன் அனைவரையும் இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்.அந்த அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளைப்பெற்றுக்கொடுக்கும் வகையில் தொடர்ந்து அகிம்சை ரீதியாக போராடிவருகின்றோம்.

நான் அரசியலில் உள்ளதன் காரணமாக ஒரு சில அரசியல்வாதிகளின் இருப்பு இல்லாமல்போகின்றது என்ற காரணத்தினால் என்மீது வீண் பழிகளை சுமத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மண்முனைப்பாலம் அமைக்கப்படும்போது முஸ்லிம்கள் வந்து குடியேறிவிடுவார்கள் என்று கூக்குரல் இட்டனர்.அதனால் மண்முனைப்பாலம் எமக்கு அவசியம் இல்லையென்று கூறினார்கள்.மண்முனை பாலம் கட்டப்பட்டதன் காரணமாக பல்வேறு வளர்ச்சிப்போக்கு படுவான்கரையில் ஏற்படுகின்றன.

நான் மாகாணசபை உறுப்பினராக இருக்கின்றபோதிலும் பல தூதரகங்கள் ஊடாக என்னால் முடிந்தவற்றை செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றேன்.

அம்பிளாந்துறை-குருக்கள்மடம் மற்றும் குறுமண்வெளி-மண்டூர் பாலங்களை அமைப்பதற்கான அனுமதிகள் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டன.ஒவ்வொரு திட்டத்திற்கும் 300மில்லியன் ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளன.அதற்குரிய திட்டத்தினை வழங்குமாறு கூறியுள்ளார்கள்.அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.