களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் மாபெரும் வியாபாரச் சந்தை

(லியோன்)

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் , நாகபுரம் , மகிளூர்முனை ஆகிய கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் மாபெரும் வியாபாரச் சந்தை  
மகிழூர் பொது விளையாட்டு  மைதானத்தில் நடைபெற்றது 

 மட்டக்களப்பு அம்கோர்  நிறுவன நிதியுதவியின் கீழ்  கண்ணகிபுரம் , நாகபுரம் மகிளூர்முனை ஆகிய கிராமத்தில் இயங்கிவரும் கிராம வாழ்வாதாரக் குழுக்களின் ஏற்பாட்டில்  வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில்  பெண் சுயதொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் மாபெரும் வியாபாரச் சந்தை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச சபைகுற்பட்ட  மகிழூர் பொது விளையாட்டு  மைதானத்தில்  நேற்று (25.) மாலை ஆரம்பமானது.
இக் கிராமத்தில் நலிவுற்ற பெண்களின்  தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வகையில் அவர்களை ஊக்குவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்காகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதன் ஆரம்ப நிகழ்வு  (25.08.2016) மாலை நடைபெற்றது.  இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்  யு .எஸ் . எம் .ரிஸ்வி , களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்  எம் .கோபாலரெட்ணம் , மட்டக்களப்பு அம்கோர் நிறுவன திட்ட முகாமையாளர் டி .சிவயோகராஜன் , அம்கோர் நிறுவன செயல்திட்ட உத்தியோகத்தர்  திருமதி சத்தியா விக்டர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு வியாபார சந்தையினை ஆரம்பித்து வைத்தார்கள் .

இதன் ஆரம்ப நிகழ்வில் அம்கோர்  நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் , கிராம வாழ்வாதாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த  வியாபார சந்தை  25 மற்றும்  26 ஆம்  திகதிகளில் இரண்டு நாட்களாக  நடைபெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது .