ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துசெயற்படப்போவதாக அக்கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று ரி.எம்.வி.பி.கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரவியம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் 41வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த இரத்ததானமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்த இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் இரத்ததான முகாமை நடாத்தினர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதித்தலைவர்,
இந்த நல்லாட்சியில் எமது தலைவர் செயலாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் நாங்கள் பின்வாங்கவில்லை.முன்பைவிட எமது கட்சி தற்போது செயற்பாட்டினை அதிகரித்துள்ளதுடன் பலமிக்கதாகவும் மாறிவருகின்றது.

நாங்கள் எமது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்கொண்டுவருகின்றோம். எமது கட்சியானது தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளோம்.கடந்த காலத்திலும் நாங்கள் இணைந்து செயற்பட்டுவந்தோம்.அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் இணைந்துசெயற்படவுள்ளோம்.