மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் கிழக்கு மாகாண தமிழர் விளையாட்டு விழா -2016

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திரனாளிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்த வகையில் இந்த விளையாட்டு விழா எதிர்வரும் 11ஆம்12ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த விளையாட்டு விழா ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திரனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சி.பரமானந்தம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடாத்தப்படவுள்ள இந்த மாகாணமட்ட மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு விழா தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை பிற்பகல் கல்லடி,வொய்ஸ் ஒப் மீடியாவிpல் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றிணைத்து மாபெரும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 7176 மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம்.தற்போது இந்த தொகை இனங்காணப்பட்டுள்ளது.அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் களப்பரீட்சையாக இந்த விளையாட்டு விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம்12ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில் 25க்கும் மேற்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் ஒவ்வொரு பிரிவினருக்குமான விளையாட்டுகள் இதில் நடைபெறவுள்ளதுடன் அவர்களின் பல்வேறு உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

11ஆம் திகதி காலை 9.00மணிக்கு ஆரம்பமாகவுள்ள விளையாட்டு நிகழ்வுகள் மறுநாள் மாலை 6.00மணிவரை நடைபெறவுள்ளதுடன் இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் அதிதிகளாக அழைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் திறமையினை வெளிக்கொணரும் வகையில் நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில் அனைத்து பொதுமக்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.