அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்பட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

யுத்தத்தில் சிக்கி தவித்த இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்.அந்த ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ஸ்த்திரத்தன்மை இந்த நாட்டில் இருக்கவேண்டும்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொது அமைப்புகள்,சமூக நிறுவனங்கள்,கல்வி நிலையங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் யோகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள்,சமூக நிறுவனங்கள்,கல்வி நிலையங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா நிதியில் 18 அமைப்புகளுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதன் ஊடாக மோசமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சு ஊடாக பத்தாயிரம் வீடுகளை தலா எட்டு இலட்ம் ரூபா செலவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.அந்த வiகியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 1000 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதற்கு மேலதிக இன்னும் 1000 வீடுகளை இந்த ஆண்டுக்குள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.

அதனைப்போன்று ஜனாதிபதியின் பணிப்புரையின்பேரில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ் மூன்று ஆண்டுகளில் 65ஆயிரம் வீடுகளை வடகிழக்கில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது நிதிகளையும் பெற்று இரண்டு மாதங்களில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 12ஆயிரம் வீடுகளையும் மிகுதியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் ஊடாக பல்வேறுபட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும்வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

அவ்வாறு நடைபெறும்போது சில அசௌகரியங்கள்,பிரச்சினைகள் ஏற்படலாம்.காலதாமதங்கள் ஏற்படலாம்.அதனை சிலர் விமர்சிக்கும் சூழ்நிலை தற்போது இருந்துவருகின்றது.பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்கள் ஒரு புதிய அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளனர்.அந்த பெரும்பான்மை மக்களின் விருப்பத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அதற்கு மாறாக செயற்படும்போது அது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடாகவும் நாட்டு மக்களுக்கு எதிரான செயற்பாடாகவும் மாறும் செயற்பாடாக மாறும் நிலை உருவாகும்;.

சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பான மோசமான பார்வையிருந்துவந்தது.இன்று அந்த நிலைமைகள் மாற்றப்பட்டு சர்வதேசம் இலங்கையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையினை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.அவ்வாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் நாட்டினை நாங்கள் கட்டியெழுப்பமுடியாது.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியாது.

யுத்தத்தில் சிக்கி தவித்த இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பவேண்டுமாகவிருந்தால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்.அந்த ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ஸ்த்திரத்தன்மை இந்த நாட்டில் இருக்கவேண்டும்.அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

எனவே அரசாங்கத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்,அரசாங்கத்தினை வீழ்த்த எடுக்கும் முயற்சிகள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை மிக மோசமான நிலைக்கு தள்ளக்கூடும்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்ட அரசாங்கத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.ஒரு அரசு மாற்றம் ஏற்படும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக நாங்கள் மாறவேண்டும்.