News Update :
Home » » இலங்கை அரசியலில் உடன்பாடில்லை – சிறிநேசன் எம்.பி.

இலங்கை அரசியலில் உடன்பாடில்லை – சிறிநேசன் எம்.பி.

Penulis : kirishnakumar on Monday, July 11, 2016 | 10:08 AM

இலங்கை அரசியலில் தனக்கு அவ்வளவு உடன்பாடில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான  ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
“கலைமகள் சாதனையாளர் விழா” ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (ஜுலை 11,2016) பகல் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலையின் பிரதி அதிபர் என். இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, கல்வியியற் கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியை முடித்துக் கொண்ட 35 பேர் கௌரவித்து பாராட்டி பரிசில்களும் வழங்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீநேசன்,
நான் ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, அரசியல் வாத்தியாராக இருந்திருக்கின்றேன். இப்பொழுது அரசியல் வாதியாக இருக்கின்றேன்.

ஆனால், இலங்கை அரசியலில் எனக்கு உடன்பாடில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்பதற்காக அரசியலைப் பயன்படுத்துவது இப்படியான நிலைமைகள்தான் அரசியலில் மலிந்து கிடக்கின்றன.

இந்தப் பண்புகளைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் தங்களை உத்தமர்களாகவும் காட்டிக் கொள்கின்றார்கள்.

இந்த நிலைமைகளால் தான் நான் இலங்கை அரசியலை வெறுத்திருந்தேன். ஆயினும் என் அன்புக்குரிய மாணவர்கள் என்னை அரசியலுக்குள் எவ்வாறோ இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.

அவர்களது பேராதரவு காரணமாக நான் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டேனேயொழிய நான் சாராயம் வாங்கிக் கொடுத்தோ இலஞ்சம் கொடுத்தோ அரசியலுக்குள் தெரிவு செய்யப்படவில்லை.

எப்படியிருந்தாலும், இத்தகைய இந்த இழி அரசியல் கலாச்சாரங்களுக்கூடாக நாம் நல்லதைச் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்பது எனது அவா. அதனால்தான் இப்பொழுது அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றேன்.

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் முன்னின்று உழைத்துக் கொண்டிருக்கின்றார்.
இலங்கை இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது.

எனவே, நீண்டகாலமாக புரைNயுhடிப்போயிருக்கின்ற இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், எம்மைச் சூழ்ந்திருக்கின்ற மற்றைய பிரச்சினைகள் தானாக அல்லது சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்க்கப்பட்டு விடலாம்.

அந்த சந்தர்ப்பத்தை நாம் அடையும்போது பாடசாலைகள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும் கூட தீர்ந்து விடும்.

ஆயினும், பாடசாலைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நிருவாக மட்டத்திலும், அந்தப் பிரதேசத்தில் பாடசாலைச் சமுகமும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு முன்மாதிரியான நிலைமையை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறை, பௌதீக வளப் பற்றாக்குறை என்பனவற்றை அந்தப் பாடசாலைச் சமூகமும் அந்தப் பாடசாலையின் பயனாளிகளும் கூட தற்காலிகமாகவேனும் தீர்வு காண்பதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும்.

இலங்கை அரசியல் அமைப்பில் எனக்குப் பிடித்த ஒரேயொரு விடயம் இலவசக் கல்வித் திட்டம்தான். இதனைக் கொண்டு நாம் இழந்த கல்வியை மீளப்பெற்றுக் கொண்டு அறிவார்ந்த சமூகமாக மிளிர வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger