இளைஞர் யுவதிகள் மத்தியில் தலைமைத்துவத்தை வளர்க்க இளைஞர் சேவைகள் மன்றம் வேலைத்திட்டம் -உதவி பணிப்பாளர் நைறூஸ்

இந்த நாட்டில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகள் மத்தியிலும் ஆற்றலை வளர்ப்பதற்காகவும் தலைமைத்துவத்தினை வளர்ப்பதற்காகவும் இளைஞர் சேவைகள் மன்றம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வுக்கு இணைவாக மாவட்ட மட்டத்தில் திறமையாளர்களை தெரிவுசெய்யும் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான ஜே.கலாராணி,அ.நிசாந்தினி உட்பட விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அறிவிப்பாளர்,பேச்சு,கிராமிய நடனம், புத்தாக்கம், இளம்பாடகர், கிராமிய பாடல்கள்,பரதநாட்டியம் உட்பட பத்துக்கு மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வுகளில் 160க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் தெரிவுசெய்யப்படும் இந்த போட்டியாளர்கள் தேசிய ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் தேசிய விருதுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய உதவி பணிப்பாளர்,

பல்வேறு துறைகளில் தலைமைத்துவங்களை வளர்த்தெடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்துடன் இளைஞர் யுவதிகள் மத்தியில் உள்ள கலைகலாசார ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அவர்களின் ஆற்றல்களுக்கு சிறந்த களத்தினை அமைத்துக்கொடுக்கும் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.

இளைஞர் யுவதிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசியம் வரையில் கொண்டுசெல்லும் பணிகளை நாங்கள் வருடாந்தம் மேற்கொண்டுவருகின்றோம்.