News Update :
Home » » “தமிழ் வாடிக்கையாளர்கள் இருப்பதனால்தான் முஸ்லிம் நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணரவேண்டும்”

“தமிழ் வாடிக்கையாளர்கள் இருப்பதனால்தான் முஸ்லிம் நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணரவேண்டும்”

Penulis : kirishnakumar on Thursday, June 9, 2016 | 10:51 AM

கடந்த காலத்தில் தமிழர் போராட்ட அரசியலில் முஸ்லிகளால் ஒத்துழைக்கமுடியாத நிலை இருந்தது.அதற்கு பல காரணங்கள் இருந்தன.ஆனால் அதனைமட்டும் வைத்துக்கொண்டு போராளிகள் செயற்பட்ட விதத்திலேயே மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களும் நடந்துகொள்வார்கள் என முஸ்லிம் தலைமைகள் நினைக்ககூடாது என கிழக்கு மாகாண விவசாய,கால்நடை,மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை திணைக்களத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் டாக்டர் உதயதேவி குவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,கால்நடை,மீன்பிடித்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

21மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக இரண்டு மாடியில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திற்கான அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண அமைச்சர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்கான நிதியினை மத்திய கால்நடை உற்பத்தி சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,கால்நடை வைத்தியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இந்த நாடு முழு நாடாக இயங்கியது கிடையாது.சுதந்திரத்திற்காகவும் இந்த நாட்டிற்க்காவும் போராடிய தமிழ் தலைவர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளியதன் காரணமாகவே தமிழர்கள் தங்களைக்காப்பற்றவேண்டும் என்ற சிந்தனைக்குள் வரவேண்டிய நிலையேற்பட்டது.அந்த அரசியல் நிலைமைகளின் வரலாறு இந்த நாட்டின் வரலாற்றில் துன்பியல் வரலாறாகவே முடிந்துள்ளது.

அந்த துன்பியல் வரலாறு 2009ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் நடைபெற்றுமுடிந்த பெரிய துன்பியல் நிகழ்வோடு முடிந்து அடுத்த அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது.அந்த அத்தியாயமும் ஆரம்பத்தில் மிகவும் கொடூரமாக எழுதப்பட்டது.2015 ஆம்ஆண்டு தைமாதம் 08ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுமுகமான அரசியல் நிலைமையை நடைமுறைப்படுத்துகின்ற நிகழ்கால வரலாறு நடைபெற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் இந்தக்காலம் மிகமிக முக்கியமான காலமாகும்.தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான காலமாகும்.புயலுக்கு முந்திய அமைதிபோலவே சமாதான காலங்கள் எல்லாம் வந்துள்ளன.ஓரு குறிப்பிட்ட சமாதான காலத்திலேயே ஒருவரையொருவர் எவ்வாறு எமாற்றுவது என்பதே பெரும்பான்மை அரசியல்வாதிகளின் மாறாத வரலாறாக இருந்துவருகின்றது.சிறுபான்மை சமூகத்தினை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே இலங்கை அரசாங்கங்கள் செய்துவந்துள்ளன.இந்த நல்லாட்சியில் அவ்வாறான நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என நாங்கள் நம்புகின்றோம்.

இந்தவேளையில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.உலக வரலாற்றில் சமாதானம் ஏற்படுத்தப்பட்ட கால வரலாறுகளை அரசியலாளர்கள் உள்வாங்கி அதனை மக்களிடம் கொண்டுசென்று தெளிவுபடுத்தவேண்டியதே தற்போதுள்ள அர்த்தபூர்வமான அரசியலாகும்.

தென்னாபிரிக்காவின் அரசியல்வரலாற்றினை எடுத்துநோக்கும்போது அது எமக்கு சிறந்த பாடமாக அது இருக்கமுடியும்.அந்த நாட்டில் மிதவாத தலைவராக இருந்து அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் நடாத்திய நடைமுறைகளால் தீவிரவாதியாகி 27ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவேளையில் மீண்டும் மிதவாதியாகிய நெல்சன் மண்டேலா அவர்கள் விடுதலைக்கு பின்னர் அரசியலை கையாண்ட விதமும் மகாத்மா காந்தி பிரித்தானியுடனான பேச்சுவார்த்தையின்போது கையாண்ட மூலோபாயங்களும் தற்போதைய தமிழ் அரசியல் துறைக்கு மிக முக்கியத்துவமானதாக இருக்கின்றது.

இந்தியாவில் பல்வேறு அட்டூழியங்களை பிரித்தானியர்கள் செய்தபோதும் பிரித்தானியருடன் கலந்துரையாடியே இந்தியாவுக்கு சுதந்திரத்தினைக்கொண்டுவரமுடியும் என மகாத்மா காந்தி உறுதியான நம்பிக்கைகொண்டதன் மூலமே அதில்வெற்றிபெற்றார்.

இலங்கையை பொறுத்தவரையிலும் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பல உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள,நல்லாட்சி ஏற்படுத்தப்படவேண்டும் என்ற அழுத்தங்களுடன் ஐ.நா.சபையில் அழுத்தங்களைக்கொடுத்தாலும் கூட எங்களது அரசியல் விடுதலை என்பது எங்களுடன் உள்ள பெரும்பான்மையினத்துடன் நாங்கள் ஏற்படுத்துகின்ற நல்லிணக்காம் காரணத்தினால் உருவாக்கப்பட்டு நீடித்து நிலைத்து நிற்கும்.

நாங்கள் உருவாக்குகின்ற அரசியலமைப்பு நீடித்துநிலைத்து நிற்கவேண்டும்.மூன்றாவது அரசியலமைப்பினை உருவாக்கும் நிலையில் உள்ளோம் என்றால் முன்பிருந்த அரசியலமைப்பு பாராளுமன்றத்தினால் மாற்றியமைக்கப்படுகின்றன என்பதை உணர்ந்துகொண்டால் நான்காவது அரசியலமைப்பு ஒன்று உருவாகாதவகையில் ஒரு நல்லிணக்கம் இருக்கவேண்டும்.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஓரு ஐயப்பாட்டில் உள்ளனர்.தமிழர்கள் தனிநாட்டை உருவாக்கி தமிழ்நாட்டுடன் இணைக்கப்போகின்றார்கள்,அதன் மூலம் இந்த நாட்டை துண்டாடப்போகின்றார்கள் என்ற வித்து ஒன்று சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எத்தனை தடைவ மறுத்தாலும் அதனையே தூக்கிப்பிடித்துக்கொண்டு அரசியல்செய்ய இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சியென்று பெயரைக்கொண்டுள்ளவர்கள் இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொய் கூறுகின்றனர்.சமஸ்டி என்ற போர்வையில் இந்த நாட்டினை பிரித்து தனிநாடு உருவாக்கப்போகின்றார்கள் என்று கூறுகின்றனர்.இதுபொய் என்பதை தென்பகுதி மக்களுக்கு கூறவேண்டியது சிறுபான்மை அரசியல்வாதிகளின் மிக முக்கிய கடமையாகவுள்ளது.
பெரும்பான்மை தலைவர்கள் ஒன்றை உறுதியாக நம்பவேண்டும்.நாங்கள் எந்தவித கபடத்தனமும் அற்றவர்களாகவே சமஸ்டியை கோருகின்றோம்.1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட அன்றே இது வலியுறுத்தப்பட்டது.

குட்டக்குட்ட குனிபனும் மடையன் குனியகுனிய குட்டுபவனும் மடையன் என்பதற்கு இனங்க எங்களுடைய தலைவர்கள் இருக்கின்றார்கள் நாங்கள் குனிய முடியாது என்ற காரணத்தினால் எங்களுடைய இளைஞர்கள் குட்டவேண்டும் என்று எழுந்தார்கள்.அதன் காரணமாகவே தீவிரவாதம் தோன்றியது.

உலகில் எந்த விடுதலை இயக்கங்களும் செய்யாத அர்ப்பணிக்களை அவர்கள் செய்தார்கள்.ஆனால் உலக அரசியல் வித்தியாசமாக மாறியதன் காரணமாகவும் அதற்கு ஏற்றாற்போல் தீவிரவாத தலைவர்கள் தமது திசையினை மாற்றிக்கொள்ளாத காரணத்தினால் அனைத்து உலக நாடுகளும் சேர்ந்துவந்து ஒன்றாக இருந்து அடித்துக்கொன்றார்கள்.

ஆனால் எங்களது கோரிக்கையில் தர்மம் இருக்கின்றது என்ற காரணத்தினால்தான் இன்றும் நாங்கள் எழுந்து நிற்கின்றோம்.அந்த தர்மத்தினை நாங்கள் சரியான முறையில் கடைப்பிடிக்கின்றோம் என்பதனாலும் உண்மையாக நாங்கள் அரசியல்செய்கி;னறோம் என்பதும் சாத்வீகமே எமது கொள்கை என்பதையும் வெளிப்படையாக காட்டவேண்டிய கட்டத்தில் தமிழ் அரசியல் உள்ளது.

சாத்வீக வழியில் எமது உரிமைகளைப்பெற்றுக்கொள்ள நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்.அர்ப்பணிப்புள்ள அரசியல்வாதிகள் இருக்கும்போது எமது விடுதலையினை பெற்றெடுக்கமுடியும்.

வடகிழக்கினைப்பொறுத்தவரையில் எங்களுக்கெல்லாம் இருக்கும் எதிர்காலம் ஒன்று என்பதை உணர்ந்து தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிக பக்குவமாக கடமையாற்றவேண்டிய நிலையில் உள்ளோம்.
நாங்கள் ஒருதாய் பிள்ளைகளாக இங்கிருக்கின்றோம்.முஸ்லிம் வியாபாரத்தளங்கள் இயங்குகின்றன என்றால் அது தமிழ் மக்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதன் காரணம் என்பதை முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.உங்களது வியாபாரம் நடக்கவேண்டும் என்றால் உங்களது வாடிக்கையாளர்கள் இருக்கவேண்டும்.

வாடிக்கையாளர்களாக இருக்ககூடிய ஒரு இனத்தினை வஞ்சிக்கும் வகையிலே முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகள் அமையக்கூடாது.கடந்த காலத்தில் தமிழ் போராட்ட அரசியல் வரலாற்றில் பல காரணங்களினால் முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமுடியாத நிலையிருந்தது.அதனை மட்டும் வைத்துக்கொண்டு போராளிகள் செயற்பட்ட அதே விதத்திலேயே தற்போதுள்ள மிதவாத அரசியல்வாதிகளும் செயற்படுவார்கள் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைக்ககூடாது.

முஸ்லிம் அரசியல்வாதிகளை அரசியலுக்குள் இழுத்துவந்தவர்கள் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் என்ற அந்த நல்ல பாடத்தினை எண்ணிப்பார்க்கவேண்டும்.மசூர் மௌலானா அவர்களுக்கு செனட்டர் மாணிக்கம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய செனட்டர் பதவியை அவருக்கு வழங்காமல் மசூர் மௌலானாவுக்கு கொடுத்தது எமது தமிழரசுக்கட்சியாகும்.

அதேபோன்று மூதூர் தொகுதியில் தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் இருந்தும் முஸ்லிம் அரசியல்வாதியொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவரைவெற்றிபெறச்செய்தது தமிழரசுக்கட்சி.ஆனால் அவர் கட்சி மாறிச்சென்றுவிட்டார் என்பது வேறுவிடயம்.எந்தவொரு காலத்திலும் மிதவாத தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளை முஸ்லிம் மக்களை ஏமாற்றியது கிடையாது.ஏமாற்றவும் மாட்டோம்.

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் தலைமைகள் கைகோர்க்கவேண்டும்.இந்த 30வருட காலத்தில் பல மூலோபாயங்களை முஸ்லிம் தலைவர்கள் வகுத்துள்ளார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.இங்கிருந்த தீவிரவாத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை அதுநியாயமாக இருக்கலாம் என்பது எங்களது எண்ணமாகும்.

ஆனால் இனிமேலும் அதேவியூகத்திலே சத்தமில்லாமல் தமிழ் அரசியலை தோற்கடிக்கும் வகையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்படக்கூடாது என்பதனை உரிமையோடு சொல்லிவைக்கின்றேன்.
நாங்கள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருக்கவேண்டும்.எல்லா இடங்களிலும் நாங்கள் ஒன்றித்துவாழக்கூடியவர்கள் என்ற உணர்வுவந்துவிட்டால் எங்களுக்குள் இருக்கும் சந்தேகங்கள் களைந்துவிடும்.

தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரு அரசியல் அமைப்பினை முன்வைக்க முன்வந்தால் பெரும்பான்மை சமூகம் தலைவணங்கியே ஆகவேண்டும்.அந்த அரசியலமைப்பினை நிராகரித்துவிட்டு பெரும்பான்மை இந்த நாட்டில் ஆட்சியை நடாத்தமுடியாது.

எங்களுக்குள் சில தீவிரவாதிகள் இருக்கலாம்.எல்லோருக்குள்ளும் தீவிரவாதிகள் உள்ளனர்.அவர்கள்தான் முழு சமூகத்தினையும் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்று கருதக்கூடாது.முஸ்லிம்-தமிழ் அரசியல்வாதிகளுக்குள் பிடுங்குப்பாடுகள் இருப்பதை நாங்கள் கண்டுள்ளோம்.அதுபிழையென்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

உண்மைத்துவத்தை யதார்த்ததை உணர்ந்து மூன்று இனங்களும் இணைந்து மும்முனை இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நாட்டினை இலங்கையாகவே வைத்திருக்கமுடியும்.


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger