மட்டக்களப்பில் கிராம சேவையாளர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்ககோரியும் கிராம சேவையாளர்கள் தங்களது கடமையினை அச்சமின்றி மேற்கொள்வதற்கான நிலையினை ஏற்படுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளங்களிலும் இன்று கடமைக்கு வந்த கிராம சேவையாளர்கள் கறுப்பு பட்டி போராட்டங்களில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடாத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் இந்த போராட்டங்களில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் பிரதேச செயலகத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் நடாத்திய அதேவேளையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி தலைமையிலான கிராம சேவையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம சேவையாளர்கள் கடமையாற்றும்போது சீருடை தரித்தவர்கள் அதில் தலையிடுவது சிவில் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கையென இங்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கிரானில் இராணுவத்தினரால் கிராம சேவையாளர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் தாக்கியதாக கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினர் விடுதலைபெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.