மூதாதையர் பாதுகாத்து தந்த இயற்கையினை விசமிகள் அழிக்கின்றார்கள் -மட்டு.அரசாங்க அதிபர்

எமது மூதாதையர் மிகக் கவனமாகப் பாதுகாத்துத் தந்த இந்த இயற்கை வளத்தை விசம சக்திகள் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் கவலை தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சூழலைப் பாதுகாக்கும் “விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்” புதன்கிழமை 01.06.2016 மட்டக்களப்பு கல்லடிப்பாலச் சந்தை திறந்த வெளியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது ஜுன்; 3ம் திகதி வரை காலை 10.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, தற்போது எங்சியிருக்கின்ற இந்த இயற்கை வளத்தை எதிர்கால சந்ததியிடம் கைளிக்க வேபண்டிய கடமைப்பாடு தற்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் எல்லோருக்கும் உண்டு. இதை உணர்ந்தவர்களாக நாங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை 31.05.2016 நள்ளிரவு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காட்டு வளங்களை அழித்துக் கொண்டிருந்த விசமிகளை பிடிப்பதற்குச் சென்ற இரண்டு கிராம சேவகர்களும் வனவிலங்குப் பாதுகாப்பு உத்தியோகத்தரும் கடுமையாகத் தாக்கப்ப்பட்டு வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய கேடுகெட்டுவர்கள் இந்த நாட்டையும் மக்களையும் நாட்டு வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்

இந்நிகழ்வில் ஐநா நிறுவன அதிகாரிகள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் விஷேடமாக எமது இயற்கைச் சூழல் மாசுபடாமல் பாதுகாத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்தல், உயிரினங்களைப் பாதுகாத்தல், சேதனப்பசளைப் பயன்பபாட்டை ஊக்குவித்தல், மற்றும் எமது உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல் எனும் கருப்பொருளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பசுமை உலகை நோக்கிய செயற்பாடுகள் சம்பந்தமாக பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வையும் அறிவையும் தரக்கூடிய கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூழல் நலன் சார்ந்த மற்றும் ஆரோக்கியமான பொருட்களும் இக்கண்காட்சியல் விற்பனைக்கு இடம்பிடித்துள்ளன.