திராய்மடுவில் நடைபெற்ற கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு திராய்மடுவில் மாகாண அபிவிருத்தி விசேட நிதியத்தின் ஊடாக அமைக்கப்படவுள்ள இந்த பயிற்சி நிலையத்திற்கு முதல்கட்டமாக 44மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டுவரும் பயிற்சி நெறிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அவற்றினை ஒருங்கிணைத்து ஒரு இடத்தில் வழங்கும் வகையில் தங்குமிடத்துடன் கூடியதாக இந்த பயிற்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா.ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் கே.முருகானந்தன்,மாகாண கலாசார பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்கள் மற்றும் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.