மட்டக்களப்பில் சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்டும் நிகழ்வு

தேசிய சமாதானத்திற்காக சமாதானம் மற்றும் சர்வ இன நல்லிணக்கத்திற்கான சர்வமத சமூகங்களிடையே ஒருமைப்பாட்டை வலுவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் என பலர்; பங்குபற்றினர்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு மத மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானது. சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், கருணை, பொறுமை, அன்பு,  அஹிம்சை போன்ற குணாம்சங்கள் சகோதரத்துவ மத போதனைகள் மூலம் சமூக இணக்கப்பாட்டிற்குப் பாரிய பங்களிப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதால் இந்நிகழ்வை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இன மத வேறுபாடுகளின் அடிப்படையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் பற்றி மூன்றாம் கட்ட செயற்பாடுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு தேசிய சமாதானப் பேரவையால் இலங்கையின் 9 மாவட்டங்களில் சர்வமத அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து 9 சர்வமதப் பேரவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த  அமைப்பில் நியமிக்கப்பட்ட பேரவை அங்கத்தவர்கள் மாதாந்தம் ஒன்றுகூடி நிகழ்ச்சியின் நோக்கங்களை அடையும் முகமாக பலதரப்பட்ட திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகங்களுக்கிடையில் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காரணமாக பாரிய அளவிலான இன மத முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன.

இத்தகைய முரண்பாடுகளை நீக்கவும் புரிந்துணர்வை உருவாக்கவும் மாவட்ட அடிப்படையில் மதங்களுக்கிடையிலான சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை மென்மேலும் உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது என அதன் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கால சூழலில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எஸ். மூக்கையா, தேசிய சமாதானப் பேரவையின் செயற் திட்ட நிகழ்ச்சி இணைப்பாளர் சமன் பெரேரா ஆகியோர் நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.