News Update :
Home » » சிறுபான்மை சமூகங்களுக்கு தொடர்ந்து அநீயாயம் இழைக்கப்படுகின்றது - பிரசன்னா இந்திரகுமார்

சிறுபான்மை சமூகங்களுக்கு தொடர்ந்து அநீயாயம் இழைக்கப்படுகின்றது - பிரசன்னா இந்திரகுமார்

Penulis : kirishnakumar on Thursday, June 30, 2016 | 10:43 PM

நல்லாட்சியிலே சிறுபான்மையினருக்கு தொடர்ந்தும் அநியாயங்கள் இழைக்கப்படுவதாக  கிழக்கு மாகண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் பொ. நேசதுரை தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் (ஜுன் 30, 2016) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மேலும் கூறியதாவது,

இந்த இடத்தில் சமகால அரசியலையும் சிலாகித்துப் பேச வேண்டியுள்ளது. இந்த நல்லாட்சி பெயரளவிலே இருக்கிறதேயொழிய செயல்பாட்டில் நல்லாட்சியைக் காணோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் விசாரணைக்கு முகம்கொத்து வருகின்றார். ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மஹேந்திரனை விசாரணைக்காக அழைத்துள்ளார்கள்.

தமிழர்களை அழிப்பதற்காக நிருமாணிக்கப்பட்ட “சலாவ” ஆயுதக் களஞ்சியசாலை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், கடந்த 25 வருட காலம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக தமது உயிருடமைகளை இழந்த வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மை இனங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி ஏன் இந்த நல்லாட்சி அரசினால் இதுவரை சிந்திக்க முடியவில்லை.

கடந்த கால யுத்தத்தைச் சாட்டாக வைத்து வடக்கு கிழக்குப் பிரதேச மக்களின் வீடுகள், பயிச்ர்செய்கை நிலங்கள், காணிகள் படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடந்த வாரம் இராணுவத் தளபதி ஊடகங்கள் மூலமாக தெரிவித்திருந்த விடயத்திலே இனி இலங்கையில் யுத்தம் ஏற்படாது என்று கூறியிருக்கின்றார்.

இவ்வாறிருக்கும்போது ஜெனிவாவிலே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தமிழர்களின் காணிகளை 2018 அளவில் விடுவிக்கலாம் என்று கூறியிருக்கின்றார்.

ஆகிவே, இனிமேல் யுத்தம் வராது என்று கூறினால் தமிழர்களின் காணிகளை ஏன் இன்னமும் பிடித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
தென்னிலங்கையிலே மக்களுக்குப் பாதிப்பேற்பட்டால் உடனடியாக அவர்களின் வீடுகள் திருத்திக் கொடுக்கப்படும் பொழுது சிறுபான்மையினரின் காணிகளை வீடுகளை முடக்குவதிலே கவனம் செலுத்தப்படுகிறது.
இது நல்லாட்சியின் ஒரு தெளிவான பாகுபாடாகும்.

கிழக்கிலே ஸ்ரீலமுகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சியமைத்துக் கொண்டுள்ளோம்.

சென்ற மாகாண சபை ஆட்சிக் காலத்திலே இருந்த ஆளுநர் முகாமைத்துவ உதவியாளர்கள் என்று பட்டதாரிகள் பலருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தார். ஆனாலும், அதிலே தமிழ் சமூகத்தவர் புறக்கணிக்கப்பட்டார்கள்.

ஆனால், நமது கூட்டாட்சி நிருவாகம் நடைபெறுகின்றபோது தற்போது உள்ள ஆளுநருக்கும் மாகாண முதல்வருக்குமிடையில் பனிப்போர் நிலவுவதன் காரணமாக கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதியும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆளுநரும் தங்களுக்கிடையிலான பனிப்போரை நிறுத்தி ஆளையாள் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்காமல் கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதேவேளை ஆளுநர் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்”

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் உயர்வது மட்டும் அபிவிருத்தி என்று இருந்து தமிழ் மக்கள் இருந்துவிடக்கூடாது, மாணவர்களின் பெறுபேறுகள்தான் உயர்வடைய வேண்டும்.

சென்ற வருடம் க.பொ.த. உயர்தரத்தை இந்தப் பாடசாலைக்கு கொண்டுவருவதற்காக நாம் பாடுபட்டு அதில் வெற்றி கண்டுள்ளோம்.

இந்தப் பகுதிகளிலுள்ள மாணவர்கள் இனி உயர்தரம் கற்க தூர இடத்து நகர்ப்புறப் பாடசாலைகளுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. இதிலே ஒரு முக்கியமான விடயம் உயர் தரத்திலே கலைப் பிரிவை மட்டும் கற்று விட்டால் நமது கல்வித் தரம் உயர்ந்து விட்டது என்று எண்ணி விடக் கூடாது.

இப்பொழுது மட்டக்களப்பு மபவட்டத்திலே விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் நவீன தொடர்பாடல் மற்றும் தொழினுட்பத்துறை போன்ற முக்கியமான பாடங்களைப் போதிக்க ஆசிரியர்கள் போதாமலுள்ளது.

ஆகவே, இப்படிப்படிப்பட்ட துறைகளை மாணவர்கள் தெரிவு செய்வதன் மூலம் ஒரு அறிவார்ந்த சமுதாயத்துக்கான அடித்தளத்தை இடமுடியும்.
அதேவேளை இந்தத் துறைகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கௌரவத்துடன் கூடிய தொழில் வாய்ப்பும் சிறந்த பொருளாதார வளத்தையும் ஈட்டிக் கொள்ளலாம்.

யுத்தப் பாதிப்பை எதிர்கொண்ட இந்தப் பாடசாலையை இன்னும் முன்னேற்றுவதில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் திடசங்கற்பமாகவுள்ளேன்” என்றார்.


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger