மட்டக்களப்பில் யானை தாக்குதலை தடுப்பதற்காக விசேட திட்டம் குறித்து ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோதல்களை தடுத்து மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் வனஜீவராசிகள்,வனவிலங்குதுறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,அமைச்சின் செயலாளர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள்,வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ்,பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோதல்களை தடுத்து மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஏற்கனவே வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பிரிவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மீண்டும் ஒரு கூட்டத்தினை ஏற்பாடுசெய்து அதன் மூலம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம் தேசிய வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வேலைத்திட்ட கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சர்கள் வருகைதராமை தொடர்பில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கவலை தெரிவித்தார்.

மிகமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் அனைவரதும் கருத்துகளை உள்வாங்கி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு முக்கியத்துவமிக்க அரசியல்வாதிகள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த கூட்டத்திற்கு முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளாமை தொடர்பில் கடும் கண்டனத்தினையும் அமைச்சர் இங்கு தெரிவித்துக்கொண்டார்.