மண்டூர் பொலிஸ் நிலையத்தினை அகற்றி காணியை விடுவிக்குமாறு மகஜர் கையளிப்பு

மட்டக்களப்பு,மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் தனியார் காணியில் உள்ள வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தினை அகற்றி தமது காணிகளை வழங்குமாறு கோரி மகஜர் ஒன்று அரசியல்வாதிகள்,அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் வாழ்ந்த மக்களின் காணிகளில் படைமுகாம் அமைக்கப்பட்டு பின்னர் அது பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டது.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையம் உள்ள காணிகளுக்குரிய மக்கள் தமது காணிகளை வழங்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்துவந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த காணியை உரிமையாளர்களுக்கு வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

எனினும் குறித்த காணிகளை இதுவரையில் காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த காணிகளை வழங்குமாறு கோரி வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்,மாவட்ட அரசாங்க அதிபர்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்இரா.துரைரெட்னம் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த மகஜரின் தமது காணிகளை உடனடியாக வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு காணி உரிமையாளர்களினால் கைச்சாத்திடப்பட்டுவழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறித்த காணிகளை உரியவர்களிடம் விடுவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவதாக தெரிவித்தாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.