கிழக்கு மாகாணத்தில் நூலகங்களை நவீனமயப்படுத்த முழுமையான உதவி –பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்

கிழக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுத்தும் திட்டங்களுக்கு முழுமையான உதவிகள் வழங்க கிழக்கு மாகாணசபை தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண நூலக பணியாளர்களின் ஒன்றுகூடலும் கௌரவிப்பும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண நூலகர் பணியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண நூலகர் பணியாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.ரி.சபறுள்ளா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல்,அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ரி.எம்.ஹாபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஓய்வுபெற்ற நூலக பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நூலக பணியாளர்களின் எதிர்கால நலத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி தவிசாளர்,

மாணவர்களின் கல்விச்செயற்பாட்டுக்கு முக்கிய பகுதியாக நூலகம் விளங்குகின்றது.அவ்வாறான நூலகத்தின் வசதியை மேம்படுத்தவேண்டியது கடமையாகும்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒத்தபணியாக நூலகர் பணியும் விளங்குகின்றது.பாடசாலையில் கற்கும் மாணவர்கள் சமாந்தரமாக நூலகத்திலும் தேவையான அறிவினைப்பெற்றுக்கொள்கின்றனர்.

இன்று நவீனத்தும் அதிகரித்துவரும் காலகட்டத்தில் அதற்குள் மாணவர்கள் நுழையும் வீதமும் அதிகரித்துவருகின்றது.அவ்வாறான நிலையில் அந்த மாணவர்களுக்கு ஏற்றாற்போல் நூலகங்களையும் நவீன மயப்படுத்துவது அவசியமாகும்.

நூலகங்களை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபையினால் மேற்கொள்ளப்படும்.அதற்கு தேவையான ஆதரவை அனைவரும் வழங்குவோம்.அத்துடன் நூலகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எழுத்து மூலம் தரும்போது கிழக்கு மாகாணசபை ஊடாக அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என்று தெரிவித்தார்.