இலங்கை கபடி அணியில் பங்குகொண்டு வெற்றிவாகை சூடிய மட்டக்களப்பு வீரர்களுக்கு அமோக வரவேற்பு

ஈரானில் நடைபெற்ற கபடிச்சுற்றுப்போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி மூன்றாடம் இடம் வெற்றிக்கு பங்காற்றிய மட்டக்களப்பினை சேர்ந்த இரண்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களே இலங்கை தேசிய கபடி அணியில் இணைக்கப்பட்டு இலங்கையின் வெற்றிக்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு முதல் வலய,கோட்ட,மாகாண,தேசிய மட்ட கபடி போட்டிகளில் பங்குகொண்டு பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ராசோ பென்சி,அமிர்தலிங்கம் மோகனராஜ் ஆகியோர் இன்று இலங்கை 20வயதிற்குட்பட்ட கனிஸ்ட கபடி தேசிய அணியில் பிடித்துள்ளனர்.

இவர்கள் அண்மையில் ஈரானில் நடைபெற்ற சர்வதேச கபடி போட்டியில் கலந்துகொண்டதுடன் இந்த சர்வதேச போட்டியில் மூன்றாம் இடத்தினையும் இலங்கை பெற்றுக்கொண்டது.

இந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயம் மற்றும் பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இரண்டு வீரர்களும் வாகனத்தில் பவனியாக அழைத்துவரப்பட்டதுடன் வீரர்களை நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டவர்களும் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து பாடசாலை முன்றிலில் பாடசாலை அதிபர் எஸ்.மங்களச்சந்திரா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கபடி வீரர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர் ,ஆசிரியர்கள் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டதுடன் அமைச்சரினால் விசேட பரிசும் வழங்கப்பட்டது.