சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் உலக நடன விழா

உலக நடன விழா நேற்று கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காலை 10 மணியளவில் இராஜதுரை அரங்கில் ஆரம்பமான இந்நிகழ்வுகளுக்கு நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி த.ஜெயசங்கர் தலைமை தாங்கியதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம் அனஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்களுக்கான மாகாணப் பணிப்பாளர் திருமதி வி.சிவப்பிரியா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அருகிவரும் பாரம்பரிய நடனங்களான பறைமேளம், புலிக்கூத்து, களிகம்பு, வசந்தன் கூத்து, சிலம்பம், ஆகிய சமுதாய நடனங்கள் நிறுவக வளாகத்தில் நடைபெற்றன. வேடுவர் மற்றும் தெலுங்கு இனங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து தமது பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து கலைஞர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மாலை நிகழ்வுகள் மாலை 06 மணிமுதல் 9 மணிவரை நிறுவக இராஜதுரை அரங்கில் நடைபெற்றன. மாலை நிகழ்வுகளுக்கு கலைஞர் வேல்ஆனந்தன், யாழ் கல்விவலய ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் பத்மினி செல்வேந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்செல்வி கிருபைராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மாலை நிகழ்வின் ஒரு அம்சமாக அதிதிகளுக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான நடன ஆற்றுகைகள் இடம்பெற்றன. கண்டிய நடனம், மோகினி ஆட்டம், பரதநாட்டியம், புத்தாக்க நடனம், சப்ரகமுவ நடனம் என பல வகையான சமூகங்களைச் சேர்ந்தவர்களின் நடனங்கள் நடைபெற்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை மாணவர்கள். பொதுமக்கள் ஆகியோருடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் கலை ஆர்வலர்கள் பலர் இந்த நடன ஆற்றுகைகளைக் காண வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.