புல்லுறுவிகள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடுவதற்காக ஊடுறுவியுள்ள புல்லுறுவிகள் தொடர்பில் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் கவனமாக செயற்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களை கொன்றொழித்த ஆட்சியை வடகிழக்கு தமிழினம் மாற்றி புதிய ஆட்சியொன்றை இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.அதுபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை எதிர்க்கட்சியாகவும் அதன் தலைவரை எதிர்க்கட்சி தலைவராகவும் உருவாக்கியுள்ளோம்.

புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுடனான நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய ஒரு சூழ்நிலையில் உள்ளோம்.

வடகிழக்கில் கணிசமான ஆசனங்களை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தாலும் ஒருசில ஆசனங்களை தவறவிட்டுள்ளோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் விகிதாசார ரீதியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றெடுக்கவேண்டிய நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற்றுக்கொண்டுடோம்.

இதற்கு காரணம் தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவாக காணப்பட்டமை மற்றும் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து மாற்று இனத்தினரை பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்க்கின்றவர்கள்.பட்டிருப்பு தொகுதியில் இருந்து ஒரு கணேசமூர்த்தியும் கல்குடா தொகுதியில் இருந்து பிள்ளையானும் தமிழர்களின் 15ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பிரித்தெடுத்த பெருமைக்குரியவர்கள் அவர்கள்.அவர்களின் ஆதரவாளர்கள் இங்கும் உள்ளனர்.

இவ்வாறானவர்களின் பின்னால் செல்லும்போது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சிக்கல்களை தோற்றுவிக்கும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.எதிர்காலத்திலாவது தமிழ்மக்கள் தமிழ் மக்களாக இருக்கவேண்டும்.

பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் மாற்றுக்கட்சிகளில் தேர்தலில் நிற்கும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் வேறு இனத்தவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் கைங்கரியத்தினை நாங்கள் மாற்றவேண்டும்.எமது உரிமைகளை நாங்களே பெறவேண்டும்.எமது இனத்தின் மத்தியில் உள்ள கறுப்பாடுகளை அடையாளம் காணவேண்டும்.

எமது உரிமைகளை நாங்கள் பெற்றுக்கொள்வதற்கு வாக்குபலம் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் ஈசல்கள்போல் உருவாகியுள்ள இணையத்தளங்களும் முக்கிய பங்கைவகிக்கின்றன.மக்களை வழிப்பூட்டும் வகையிலும் தமிழ் மக்களை பலப்படுத்தும் வகையிலேயே இந்த இணையளத்தளங்கள் செயற்படவேண்டுமே ஒழிய முகவரியில்லா செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.

வாழைச்சேனையில் நடந்த நிகழ்வு ஒன்றில் மூவாயிரம் மக்கள் மத்தியில் எனக்கு இடம்பெற்ற சிறிய சம்பவம் ஒன்றிணை பெரிய பூதாகரமாக்கி நடக்காத விடயங்களை நடந்ததாக ஒரு இணையத்தளம் பிரசுரித்துள்ளது.

முகவரி இல்லாமல் மட்டக்களப்பின் பெயரை வைத்துக்கொண்டு செயற்படும் அந்த இணையத்தளத்தளம் கள்ளத்தனமாக செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புகின்றனர்.தங்களது பெயரை குறிப்பிட்டு செய்திகளை வெளியிட முடியாதவர்கள் கள்ளத்தனமாக செய்திகளை வழங்கி மக்களை குழப்புகின்றனர்.

உண்மையாக சுதந்திரமாக ஒரு ஊடகவியலாளன் செயற்படுகின்றான் என்றால் அவர் தன் முகவரியை வெளிப்படுத்தவேண்டும்.ஆனால் எதுவித அடையாளமும் இல்லாமல் மக்களை குழப்பும் வகையிலும் தங்களுக்கு தேவையான அரசியல்வாதிகளை உயர்த்தும் வகையிலும் மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் அரசியல்வாதிகளை விரும்பத்தகாத வெறுப்பூட்டி அரசியலில் இருந்து ஒதுங்கவைக்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே இவ்வாறான இணையத்தளங்கள் செயற்படுகின்றன.

அவ்வாறான அரசியல்வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் உள்ளார்கள் என்பது வெட்க கேடான விடயமாகவுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்களை விமர்சிப்பதும் தமிழ் தேசியத்தினை விமர்சிப்பதையுமே அவர்கள் நோக்காககொண்டு செயற்பட்டுவருகினறனர்.

தமிழ் தேசியத்தினை விரும்பாமல் தமது பதவியை நோக்காக கொண்டே இவர்கள் செயற்பட்டுவருகின்றனர்.