வாகரைவாணன் பற்றிய எனது மனப்பதிவு - செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன்

தமிழ் இலக்கியப் பரப்பில் புதுக்கவிதையின் வரவுக்குப் பின்னர் மரபுக்கவிதை மவுசை இழந்துவிட்டது என்றே புதுக்கவிதைப் புலவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதை எந்தளவுக்கு உற்சாகத்துடன் கையாளப்படுகிறதோ அதற்குச் சற்றும் குறையாதவகையிலே மரபுக்கவிதையாளர்களும் உற்சாகமாக எழுதிவருகிறார்கள் என்பதற்குச் சான்று வாகரைவாணன் போன்றவர்கள் என எழுத்தாளரும் இலக்கியவாதியுமான செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

உலக நண்பர்கள் அமைப்பின் இசைவோடு ‘கதிரவன் கலைக்கழகம்| 40வது ஆண்டு நிறைவில் நடாத்திய வாகரைவாணனின் ~மட்டக்களப்புக் காவியம்| நூல்வெளியீட்டு விழா, மட்டக்களப்பு, நாவற்குடா இந்துகலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய நூல் நுகர்தல் உரையளின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்ததாவது,

சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம் எனும் முழுப்பெயரை இயற்பெயராய்க் கொண்ட தமிழ்நிதி வாகரைவாணனின் ~மட்டக்களப்புக் காவியம்| நூலை நுகர்வதற்கு முன்னர் வாகரைவாணன் பற்றிய எனது மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

‘தமிழ்பேசும் மக்களின் உரிமைக்குரல்| என மகுடம் தாங்கி தந்தை செல்வா அவர்களால் வெளியிடப்பெற்ற தமிழரசுக்கட்சியின் பத்திரிகை ~சுதந்திரன்| இல் 1970 களில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட அரசியல் சார்ந்து வீறான கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்த காலம். அக்காலத்தில் அவ்வப்போது நானும் அண்ணாதாசன் துரைராசசிங்கமும், சந்தியூரான் கிருஷ்ணபிள்ளையும், வந்தாறுமூலை அமரர் சோமலிங்கமும், கல்முனை மாணிக்கவிராயர் அமரர் நோ.மணிவாசகனும் சுதந்திரனில் கவிதைகள் படைத்து வந்தோம்.

சமகாலத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனின் கவிதைகள்; ~சுதந்திரன்| இல் வீரம் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அப்போது காசிஆனந்தன் கவிதைகளுக்குச் சமதையான வீச்சோடும் வீறோடும் இன்னுமிருவர் கவிதை நெருப்பள்ளி வீசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மூதூர் ஈச்சந்தீவைச் சேர்ந்த இராசேந்திரம் எனும் இயற்பெயர் கொண்ட தாமரைத்தீவான். மற்றவர் வாகரைவாணன்.

வாகரைவாணன் அவர்கள் ~சுதந்திரன்| துணை ஆசிரியராகவும் மற்றும் கொழும்பு – 10, பண்டாரநாயக்கா மாவத்தையில் அமைந்திருந்த சுதந்திரன் அச்சகம் வெளியிட்ட ~சுடர்| மாதாந்த சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் விளங்கியவர். மட்டுமல்ல மட்டக்களப்பிலிருந்து 1998-2008 காலப்பகுதியில் சுமார் பத்து வருடங்கள் வெளிவந்த ~போது| எனும் மாதாந்தச் சிற்றிதழின் ஆசிரியரும் கூட.

தமிழ் இலக்கியப் பரப்பில் புதுக்கவிதையின் வரவுக்குப் பின்னர் மரபுக்கவிதை மவுசை இழந்துவிட்டது என்றே புதுக்கவிதைப் புலவர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கவிதை எந்தளவுக்கு உற்சாகத்துடன் கையாளப்படுகிறதோ அதற்குச் சற்றும் குறையாதவகையிலே மரபுக்கவிதையாளர்களும் உற்சாகமாக எழுதிவருகிறார்கள் என்பதற்குச் சான்று வாகரைவாணன் போன்றவர்கள்.

சங்ககாலம் தொட்டு இதுவரை நதிபோல சலசலத்து ஓடிவரும் மரபுக்கவிதையின் ஓசையிலிருந்து – அந்த ஓசை தரும் அழகிலிருந்தும் இனிமையிலிருந்தும் - தமிழ் இன்னும் விடுபட முடியவில்லை. ஏனெனில் கவிதைக்கு ஓசைதான் முக்கியம். அதுவே உயிர். ஓசையில்லாததைப் பா இலக்கியத்திற்குள் வைத்துப் பார்க்க முடியாது. அதுவும் தொடரோசை. தனியே ஓசை என்றால் பழமொழிகளும் விடுகதைகளும் கவிதையாகி விடுகின்ற ஆபத்து நிகழ்ந்துவிடும். புதுக்கவிதையில் அந்த ஆபத்துத்தான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆதலால்தான் கவிதைக்குத் தொடரோசை முக்கியம் என்பதும் தொடரோசை இல்லாதது கவிதை அல்ல என்றும் ஆகிவிடுகிறது. ஆனால் புதுக்கவிதைக்கு ஓசை ஒரு பொருட்டல்ல என்பதுதான் பொதுவிதி என்றே ~பொழிச்சல்| எனும் ஆய்வுநூலில் கவிதை காசிஆனந்தன் கூறியுள்ளார்.

ஓசை அழகில் லயித்திருப்பது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான இயல்பே. உயிரியல் ரீதியாக மனிதன் சீரான ஓசைக்குக் கட்டுப்பட்டவன். தாயின் கருப்பையில் உள்ள திரவப் பொய்கையில் மிதந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு முதல் ஏற்படும் புலன் உணர்வு செவிவழியேதான் ஏற்படுகின்றது என்பது உயிரியல் உண்மை. தாய் வயிற்றுக் குழந்தைக்கு உலகத்துடன் ஏற்படும் முதல் தொடர்பே தாயின் இதயத்துடிப்பு ஓசைதான்.
கருப்பையிலிருந்து வெளியே இவ்வுலகத்திற்கு வந்துவிட்ட பின்னர் கூட குழந்தை அழும் போது முதுகில் மெல்லத்தட்டி தாயின் இதயத்துடிப்பு போன்ற சீரான ஓசையை எழுப்ப குழந்தையின் அழுகையும் அடங்கிவிடுகிறது. தாலாட்டு ஓசையும் அவ்வாறானதே. தாலாட்டுப் பாடலின் ஓராட்டு ஓசையில் குழந்தை தன்னை மறந்து தூக்கம் கொள்கிறது. பிறப்பின் போது இப்படியென்றால் இறப்பின் போது பாருங்கள். ~ஒப்பாரி| அழுகையின் ஓசைதான் இழப்பின் துக்கம் தாளாத மனதை ஆசுவாசப்படுத்துகிறது. இப்படிப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மனிதன் ஓசையிலே லயித்துக் கிடக்கும் சந்தர்ப்பங்கள் ஏராளம். அதனால்தான் ஏடறியாத எழுத்தறியாத நாட்டுப்புறப் பாடல்களிலே ஓசை நர்த்தனமிடுவதைப் பார்த்தும் கேட்டும் மெய்மறந்துவிடுகிறோம். தற்காலப் புதுக்கவிதையாளர்கள் இந்த ஓசை அழகை இழந்து விடுகிறார்களே என்பது எனது மன ஆதங்கம். இந்த ஓசை அழகுபற்றி விலாவாரியாக  நான் விளம்புதற்குக் காரணம் இன்று வெளியிடப் பெறுகின்ற வாகரைவாணனின் ~மட்டக்களப்புக் காவியம்| நூலினை அலங்கரிக்கின்ற அத்தனை கவிதைகளிலும் ஓசை அழகு அதாவது கவிதைக்கு மிக முக்கியமான சந்தம் விரவிக் கிடக்கிறது.

கூடுதலாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் கையாண்ட விருத்தப்பாக்களிலேயே வாகரைவாணன் இக்காவியத்தை வடித்திருக்கிறார். இத்தனிச்சிறப்பை இக்காவிய நூலுக்குரிய தனித்துவத்தை முதலில் எடுத்துக் கூறுவது பொருத்தம். மழைக்காலத்தில் புற்றுக்குள்ளிலிருந்து ஈசல் புறப்பட்டு வந்தது போல் புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவருகின்ற தற்காலத்தில் வனப்புறத்திலே ஆங்காங்கே மிகவும் அரிதாக வண்ணமயில்கள் தோகை விரித்து ஆடினாற் போலவே வாகரைவாணனின் இக்காவிய நூலின் வருகை நிகழ்ந்திருக்கிறது. யாப்பின் அடிப்படைகளான சந்தமும் தொடையும் சீரும் தளையும் எதுகையும் மோனையும் அணிகளான உவமையும் உருவகமும் உயர்வு நவிற்சியும் வாகரை வாணனின் கவிதை வரிகளிலே கைகட்டி நின்று சேவகம் செய்கின்றன. கவிதையை ரசிக்கவும் புசிக்கவும் விரும்புகிறவர்கள் வாகரைவாணன் கவிதைகளையும் குறிப்பாக இக்காவிய நூலான மட்டக்களப்புக் காவியத்தைக் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மரபுக்கவிதையில் சங்கப்புலவர்களும் கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் ஆண்டாளும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாரதியும் பாரதிதாசனும் கண்ணதாசனும் காசி ஆனந்தனும் சிகரங்களைத் தொட்டுவிட்டார்கள். இனி மரபுக் கவிதையில் நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என மனம் சோர்ந்துவிடாமல் மரபுக்கவிதை இன்னும் உயிர்த் துடிப்புடன் இயங்குகிறது என்பதற்கு இம் ~மட்டகளப்புக் காவியம்| சான்றாக அமைந்து சந்தோசம் தருகிறது. இந்த முத்தாய்ப்புடன் இனி நூலுக்குள் நுழைகிறேன்.

முதல் இயலான பாயிரம் மற்றும் இறுதி இயலான மங்களம் உட்பட மொத்தம் முப்பத்திநான்கு இயல்களிலே இக்காவியம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய மட்டக்களப்புத் தமிழகத்தை ஆட்சி செய்த அரசியார் உலகநாச்சியின் கதையை அல்லது கதைப்பகுதியை வாகரைவாணன் இங்கே காவியம் ஆக்கியிருக்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்ற வாகரைவாணன் அவர்களின் ஆன்ற தமிழ்ப் புலமையும் கவித்துவச் செழுமையும் இக்காவிய வரிகளிலே கரைபுரண்டோடுகின்றன.

காவியத்தின் இயல் - 1 பாயிரம் இவ்வாறு தொடங்குகிறது.

~அன்னை என் நாட்டை அழகு தமிழ்நாட்டை
மன்புகழ்பேசும் மட்டக்களப்பென்னும்
தென்னைவளர்நாட்டை தேன்பாயும் நாட்டை
வண்ணத் தமிழ்க் கவியில் வடிக்க நான் விழைந்தேன்|


உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனின் ~தமிழன்கனவு| எனும் காவியத்தின்
எழுச்சி இவ்வாறு அமைகிறது.

~தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்
தேசம் அமைக்கப் புறப்பட்டேன் 
கைகள் வீசிப் புறப்பட்டேன்
களத்தில் ஆடப்புறப்பட்டேன்|| 
மட்டக்களப்புக் காவியத்தினதும் தமிழன்கனவினதும் ஆரம்பத்தை அதாவது முன்னையதின் பாயிரத்தையும் பின்னையதின் எழுச்சியையும் ஒப்புநோக்கும் போது உணர்வினாலும் கவிதா நெஞ்சத்தினாலும் கவிஞர் காசிஆனந்தனுக்குச் சமதையான ஓர் கவிஞராகவே வாகரைவாணன் அவர்களை நான் அடையாளம் காண்கிறேன்.

இயல் - 2 இல் தமிழ்த் தெய்வ வணக்கம் சொல்லும் வாகரைவாணன்\

~மட்டக்களப்பென்னும் மணித்திருநாட்டைக்
கட்டி நீ எழுப்பு! கல்வியிலே உயர்த்து!
எட்டுத்திசையிலும் எழுந்தது நிற்க
தொட்டுன்னைத் துதித்தேன். துணை நீ வருக|

என்கிறார். இவ்வரிகளிலே மட்டக்களப்பு மண்மீது வாகரைவாணன் கொண்டுள்ள வாஞ்சை வெளிப்பட்டு நிற்கிறது.

பண்டைத்தமிழ் இலக்கியங்களிலே ~நாவலன்தீவு| என அழைக்கப்பட்டதும் வரலாற்றில் ~லெமூரியா|க் கண்டம் என அழைக்கப்பட்டதும் ஆன பரந்த நிலப்பரப்பு அதாவது இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா ஆபிரிக்கா போன்ற நிலப்பரப்புக்களெல்லாம் ஒன்று சேர்ந்த நிலப்பரப்பு கடல்கோள்களினால் துண்டிக்கப்பட்ட தகவலையும் குமரிக்கண்டத்தின் குட்டித்தீவாக விளங்கிய ~எல்லம்| என அழைக்கப்பட்டுப் பின் ~ஈழம்| என மருவிய இலங்கைத் தீவின் தோற்றத்தையும் இயல் - 3 தொட்டுச் செல்கிறது. லெமூரியாக் கண்டம் பற்றியும் வரலாற்றில் ஏற்பட்ட கடல்கோள்கள் பற்றியும் விபரமாக அறிவதற்கு அது பற்றிய தேடலுக்கு இந்த இயல் வாசகனைத் தூண்டுகிறது.
இக்காவியம் உலகநாச்சியார் ஆண்ட பண்டைய மட்டக்களப்பு மாநிலத்தையே மையப்புள்ளியாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.

இப்பண்டைய மட்டக்களப்பு மாநிலத்தின் நுழைவாயிலாக வடக்கே மன்னம்பிட்டி புத்தரின் பிறப்பிற்கு முன்பே விளங்கியதைச் சொல்லும் இயல் - 4 ஆன ~தோரணவாயில்|

~~குன்றினில் மயில்களாடும்
குருவிகள் புறாக்களெல்லாம்
மன்றென அதனைக் கண்டு
மாநாடு நடத்திச் செல்லும்
கன்றுகள் பாயும் அந்தக்
கழனிகள் அரங்கமாகும்
ஒன்றியே தமிழர் வாழும்
ஊர் எங்கள் மன்னம்பிட்டி!||
என்று ஆரம்பிக்கிறது.
நாட்டுவளப்பம் கூறும் சங்க காலப் பாடல்களை இக்கவிதை வரிகள் நினைவூட்டுகின்றன. அமரசேனன் எனும் மன்னன் மறக்குலவீர முத்துப் பெண்ணிடம் அளித்த பண்டைய மட்டக்களப்பை வன்னியர்கள் ஆண்ட வரலாற்றையும் இந்த இயல் எடுத்தியம்புகிறது.

இயல் - 5 இலே மட்டக்களப்புத் தேசத்தின் வளப்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. முதற்கவிதை,
~~மான்பாயும் காடு மட்டக்களப்பெங்கும்
தேன்பாயும் சோலை தெரிந்து அளிகூடும்
மீன்பாயும் ஆறு மிதந்து வரும் பாடல்
வான்பாயும் மேகம் வளம் செய்யும் தேசம்||
என மட்டக்களப்பை வரவேற்கிறது.

தொடர்ந்து செல்லும் இயல்களிலே மட்டக்களப்புத் தேசத்தின் நிலவளம் - நீர்வளம் - வனவளம் - கலைவளம் - கல்விவளம் - மனிதவளம் எல்லாம் பெருமிதத்தோடும் பண்டைப் பெருமைகளோடும் அழகிய கவிதைகளாக்கப்பட்டுள்ளன. இக்கவிதை வரிகளுக்கிடையே மட்டக்களப்பின் கதையும் கலந்து களிப்பூட்டுகிறது.

ஆம்! இந்தியாவின் கலிங்க தேசத்திலிருந்து மன்னன் குகசேனனின் மகள் உலகநாச்சி இளவல் சின்னவன் நாதனுடன் கூந்தலுக்குள் ~தவசம்| உம் கரங்களுக்குள் ~லிங்கம்| உம் மறைத்து வைத்துக் கப்பலில் கடல் கடந்து மணிபல்லபம் எனும் இடம் சேர்ந்து பின் தெற்கே அனுராதபுரம் வந்து அங்கிருந்த மன்னனிடம் தான் கொண்டு வந்த ~தவசம்| அளித்து அதனால் மகிழ்ந்த மன்னன் நாச்சியார் ஆள்வதற்கு மண் கொடுத்த வரலாறு சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஏனைய இயல்களிலே மண்முனையைத் தலைநகராகக் கொண்டு உலகநாச்சியார் ஆண்ட பண்டைய மட்டக்களப்பு வடக்கே மன்னம்பிட்டியிலிருந்து ஆரம்பித்துத் தெற்கே தற்போது பாணமை என அழைக்கப்படும் ~உன்னரசுகிரி| வரை நீண்டும் மேற்கே ~சம்பான்துறை| (தற்போது சம்மாந்துறை) மற்றும் தற்போது கல்லோயா என அழைக்கப்படும். ~பட்டிப்பளை| எனும் பழந்தமிழ்ப்பூமி, தீகவாவி என்று தற்போது அழைக்கப்படும் தீர்த்தவாவி என்பவற்றையெல்லாம் உள்ளடக்கித் தற்போதுள்ள ஊவாவலைக் குன்றுகள் வரை பரந்தும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலை கடல் எல்லையாகக் கொண்டும் வியாபித்திருந்த விடயம் விளக்கப்பட்டிருக்கிறது.

மன்னன் குணசிங்கன் மனம் உவந்தளித்த மண்ணாம் மண்முனையில் காடளித்துக் கவினுறு நகரம்; சமைத்த செய்தியும் சொல்லப்படுகிறது. அந்த அரண்மனையின் புதுமனை புகுவிழாக்காட்சியும் புலப்படுத்தப்படுகிறது.
உலகநாச்சியாரின் நல்லாட்சிக் காலத்தில் சீனர்கள், யவனர், யூதச் செமித்தியர், அரபு நாட்டார் போன்ற பிறநாட்டவர் எல்லோரும் ~சம்பான்துறை|க்கு வணிகம் செய்து வந்து போன வரலாற்றச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு வாவியின் இருமருங்கும் உள்ள அதாவது கிழக்கேயுள்ள எழுவான்கரையினதும் மேற்கேயுள்ள படுவான்கரையினதும் வளங்களும் வனப்புகளும் முறையே இயல் - 14 இலும், இயல் - 15 இலும் கவினுறு கவிதைகளாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு இரண்டு கவிதைகள். ஒன்று எழுவான்கரை பற்றியது.

~~அலை கடல் ஓரம் தன்னை
அங்காடி ஆக்கிக் காட்டும்
பலவித சிப்பி, சங்கு
பார்ப்பவர் கண்களெல்லாம்
கலையதில் கண்டதாலே
கையினில் எடுத்துக் கொண்டு
விலையது பேசலானார்
விளையாட்டுப் பிள்ளை போல||

மற்றது படுவான்கரை பற்றியது,
~~எருமைகள் குளிக்கும் வேளை
ஏறியே அவற்றின் மேலே
உரிமையாய்ப் பனையான் மீன்கள்
ஓடியே பாயக் கண்டு
அரியநல் உணவே என்று 
அருகினில் நிற்கும் கொக்கு
தருணத்தைக் கைவிடாது
தாவியே கொத்திக் கொள்ளும்||
மேற்படி கவிதை வரிகளைப் படிக்கும் போது கவிஞர் காசிஆனந்தனின் ~தமிழன் கனவு| குறுங்காப்பியத்தில் தமிழ் மண்வளம் கூறும்
~~ கயல்தாவி விளையாடப் பாய்ந்த தண்ணீர்
கடலோரம் குளமாகி உப்பாய்க் காயும்!
மயிலாடிக் களிகொள்ள வானத்தின் மேல்
மழைமேகம் நாடோறும் பந்தல் போடும்!
வயலோரம் கரும்பாலே வேலிநிற்கும்!
வாழையில் தலைசாய்த்த கனிக்குலைக்குள்
ஒயிலாக அணிற்பிள்ளை உறங்கி நிற்கும்...........
................................................................||

~~வேரோடு பலாக்கனி தொங்கும்! ஆங்கே
வெள்ளாடு பழத்தின் மேல் முதுகு தேய்க்கும்!
நீரோடை வெள்ளத்தில் மீனையுண்டு
நெஞ்சத்தால் வெறிகொண்ட கொக்கினங்கள்
கூரானவாய்கொண்டு மரத்தின் கொம்பில்
கூட்டுத்தே னுடைத்தலும் தேனினாறு
பாரெல்லாம் பெருக்கெடுத் தோடும்!..............
.......................................................||
போன்ற கவிதை வரிகளும் நினைவில் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
இயல் - 17 இல் உலகநாச்சியார் கோவில்குளத்திலே லிங்கத்தை வைத்துச் சிவன்கோவில் எழுப்பிய செய்தி சொல்லப்படுகிறது.
இயல் - 18 இல் குணசிங்கனின் தம்பிக்கும் உலகநாச்சியாருக்கும் நடந்தேறிய காதல் திருமணம் காட்டப்படுகிறது.
இயல் - 19 இலிருந்து இயல் - 22 வரை உலகநாச்சியாரின் இல்லறவாழ்வு நல்லறமாக அமைந்த நாட்களும், அவரது ஆட்சியின் மாட்சிமைகளும்,
இயல் - 23 இல் கொக்கட்டிச்சோலையில் கோயில் அமைந்த வரலாறும்
இயல் - 24 இல் உலகநாச்சியார் ஆட்சியில் தமிழ்மொழி உன்னதம் பெற்றமையும்
இயல் - 25 இல் தைப்பொங்கல் விழாவும்
இயல் - 26 இல் அறுவடை விழாவும்
இயல் - 27 இல் மட்டக்களப்பு மண்ணின் பண்பாட்டு அடையாளமான கண்ணகி விழாவும்
இயல் - 28 இல் வட்டக்களரிக் கூத்தும்
இயல் - 29 இல் வெறியாட்டு நிகழ்வும்
இயல் - 30 இல் சிறுதெய்வ வழிபாடுகளும்
இயல் - 31 இல் இலிருந்து இயல் 33 வரை அரசி உலகநாச்சியாரின் ஆட்சி மகன் அதிசுதன் கைக்கு மாற்றம் பெறுவதும் கூறப்பட்டு இறுதி இயலான – 34 இல் மங்களம் பாடப்பெற்றுக் காவியம் நிறைவு பெறுகிறது.
அந்த மங்களத்தை நானும் இங்கே பாடி எனது நூல் நுகர்தலை நிறைவு செய்ய எண்ணுகிறேன்.

மங்களம் தங்குக மட்டக்களப்பென்னும்
எங்கள் நிலத்தினிலே – வளம்
பொங்கும் தலத்தினிலே
தெங்கு பலாவோடு தேன் கதலி வாழை
எங்கும் செழிக்கட்டுமே – மண்ணில்
தங்கிக் கொழிக்கட்டுமே.

நெல்லு வயலோடு நீண்ட காடு எலாம்
முல்லை குலுங்கட்டுமே – அதன்
எல்லை விளங்கட்டுமே
கல்லு மலையெல்லாம் காணும் குறிஞ்சிகள்
மெல்ல விரியட்டுமே – அழகை
அள்ளிச் சொரியட்டுமே

அலையின் முதுகிலே ஏறி அமர்ந்திடும்
கலங்கள் விரையட்டுமே – மீன்
குலங்கள் நிறையட்டுமே
நிலையாய் இருந்திடும் நீரின் அடியிலே
நித்திலம் விளையட்டுமே – அதை
இத் தலம் அளையட்டுமே.

கூத்து எனும் கலை கோலாட்டம் கும்மிகள்
காத்து நாம் வளர்த்திடுவோம் - அதைப்
பார்த்து நாம் மகிழ்ந்திடுவோம்
மூத்த தமிழ்மொழி மூச்சு நமக்கது
மோதும் பகை அழிப்போம் - அது
வேதம் என மொழிவோம்.